பெரம்பூர்: கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் 333 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த குப்பை கிடங்கு பகுதியில் 252 ஏக்கர் பரப்பளவில் திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. இதனை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் பறந்து விரிந்த குப்பை கிடங்கில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடினர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு அவ்வழியாக சென்றவர்களுக்கு லேசான கண் எரிச்சல் ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
