- வருவாய் திணைக்களம்
- தூத்துக்குடி
- தமிழ்நாடு வருவாய்த் துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
- ஆட்சியர்
- தமிழ்நாடு வருவாய்த் துறை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு...
தூத்துக்குடி, பிப். 28: தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரியும், வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வது தொடர்பாகவும், பணித்தன்மை மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வலியுறுத்தியும்,
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3வது நாளாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஞானராஜ், காளிராஜ், குமாரலிங்கம், சந்திரசேகர், பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வருவாய்த் துறை, நில அளவைத்துறை, கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருவாய்த்துறையினரின் தொடர் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
