×

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி பலியான நெல்லை தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதி மேயர் ஜெகன்பெரியசாமி வழங்கினார்

தூத்துக்குடி, பிப். 28: தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி பலியான நெல்லையை சேர்ந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவியை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் நெல்லை மாவட்டம் பருத்திகுளத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர் ராஜ்குமார் பணிபுரிந்து வந்தார். இவர், தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் பகுதியில் கழிவுநீரை பம்ப் செய்து வெளியேற்றக்கூடிய பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது விஷவாயு தாக்கி பாதாள சாக்கடை குழிக்குள் சரிந்து விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் ராஜ்குமார், இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக ராஜ்குமார் உடல், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து ராஜ்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அவரது குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், குடியிருப்பதற்கு வீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி பலியான ராஜ்குமார் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் பெற்றுக் கொடுத்தனர். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ராஜ்குமார் குடும்பத்திற்கு ஒரு வீடு வழங்க பரிந்துரை கடிதம் அனுப்பப்படும் என்று மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்தார். அப்போது ஆணையர் பிரியங்கா, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், வருவாய் அலுவலர் லெனின், கவுன்சிலர் முத்துவேல், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Mayor ,Jehanberyasamy ,Vishwajah attack ,Tuticorin ,Thoothukudi, ,Jegan Beryasami ,Nellai ,Vishwajah ,Nella District Cottagu ,Tuthukudi ,
× RELATED காரியாபட்டியில் திறப்பு ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம்