காரியாபட்டி, பிப்.28: காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ரூ.2.35 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் மூலமாக ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 10 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிதி அமைச்சர் தங்கம்தென்னரசுவின் ஆலோசனையின் பேரில் காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பேரூராட்சி தலைவர் செந்தில் கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லியாகத் அலி, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
