சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நேற்று விமானத்தில் சென்னையில் இருந்து கோவை சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசித்துக் கொண்டு இருக்கிறோம். கால அவகாசம் இருக்கிறது. வரும் 24 முதல் 27ம் தேதிக்குள் எங்கள் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சி மலர வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை எங்கள் கட்சி வலியுறுத்துகிறது. அப்போது தான் மக்கள் பிரச்னை, கோரிக்கைகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும். தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். தமிழ்நாட்டில் எங்கள் கட்சி 120 தொகுதிகளில் பலம் வாய்ந்தாக இருக்கிறது. அடிப்படையில் கொள்கை வாதியாக நாங்கள் இருப்பதால், எங்கள் கொள்கையுடன் ஒத்துபோகும் கூட்டணியில் நாங்கள் இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
