×

வரும் 22ம்தேதி திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை: கூட்டணி கட்சிகளை சந்தித்து வரும் திமுக மூத்த அமைச்சர்கள்

 

சென்னை: திமுக கூட்டணியில் வரும் 22ம்தேதி முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னதாகவே கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து மூத்த அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதி தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் அனைத்து அப்படியே இருப்பதாக வலிமையான கூட்டணியாக பார்க்கப்படுகிறது. மேலும் தேர்தல் பணிகளில் தீவிரமாக திமுக தலைமை ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை கடந்த மாதம் அமைத்தது. அதே சமயம் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நெருக்கடி கொடுத்து வந்தது. ஆனால் திமுக தரப்பில் குழு அமைத்த பின்பே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் உடனடியாக அமைத்து பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையும் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், வரும் 22ம்தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அன்று முதல் கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் திமுக தலைமையகத்தில் நடைபெற உள்ளதாகவும், கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இதில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, திமுக தரப்பில் சில மூத்த அமைச்சர்கள் மூலமாக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் மூலமாக இந்த பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். சிறிய கட்சிகளுக்கு கடந்த முறையை காட்டிலும் அதிகளவில் யாருக்கும் தொகுதிகள் ஒதுக்க முடியாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மறுபுறம் விசிகவுடன் எ.எ.வேலு பேசி வருகிறார். அதேபோல் முஸ்லீம் லீக், மமக, கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோன்று, தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கும் தொகுதி ஒதுக்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கூட்டணி கட்சிகளுடன் திமுக தரப்பு தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட நெருக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வரும் 22ம்தேதி முதல் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கான பணிகளை திமுக தலைமை வேகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : 22nd ,Dimuka Constituency Participation Talks ,Dimuka ,Chennai ,Dimuka Alliance ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…