×

திமுக அணிக்கு ஒட்டு மொத்தமாக சென்று விடாமல்: சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க அமித்ஷா-விஜய் ரகசிய டீல் ? பரபரப்பு தகவல்

தமிழக சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப். 23ம் தேதி நடக்கிறது. தற்போதைய நிலவரப்படி 4 முனை போட்டி நிலவுகிறது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுக அணிக்கு செல்வதை தடுக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தவெக தலைவர் விஜய்யும் ரகசிய டீல் போட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: கரூரில் 41 பேர் பலியான வழக்கு தொடர்பான விசாரணைக்கு விஜய் கடந்த 15ம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணை முடிந்து வெளியில் வந்த விஜய், சிபிஐ அலுவலக வளாகத்தில் இருந்தே திறந்த காரில் நின்று கையசைத்தபடி வெளியே வந்தார். முதல்முறை விசாரணைக்கு சென்றபோது, இருண்ட முகத்துடன் காரின் பின் சீட்டில் அமர்ந்து வந்த விஜய், இப்போது காரில் நின்று கையசைத்தபடி சிரித்த முகத்துடன் வந்தது முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், விஜய்க்கும் ரகசிய டீலிங் நடந்திருக்கலாம். அதுதான் விஜய்யின் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்று கூறப்படுகிறது.

அதாவது, இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை விஜய் தனித்தே நிற்க வேண்டும். அப்போது தான் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக திமுக அணிக்கு செல்லாமல் தவெகவுக்கு கணிசமாக செல்லும். இதன்மூலம் கணிசமான தொகுதிகளில் திமுகவின் வெற்றியை தடுக்கலாம் என்பது அமித்ஷாவின் ஐடியா. இது தொடர்பாக இருவருக்கும் டீலிங் ஏற்பட்டிருக்கலாம். இதனால் தான் விஜய், பாஜவை விமர்சிப்பதே இல்லை. விஜய்யுடன், டெல்லி பாஜ தலைமை கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்பதெல்லாம் டிராமா. அதேபோல் ஜனநாயகன் பட முடக்கம் என்பது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கலாம். ஆரம்பத்தில் தவெகவுடன் கூட்டணி வைக்க பாஜ விரும்பியது உண்மை தான். ஆனால் இப்போது சிறுபான்மையினர் வாக்குகளை பிரிப்பதற்காக அந்த எண்ணத்தை பாஜ கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தவெக சார்பில் நடந்த இப்தார் விருந்தில் பேசிய விஜய், யாருடனும் கூட்டணி இல்லை. தனித்தே போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக கூறினார். அதேபோல் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, விஜய்க்கு துணை முதல்வர் பதவி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி, 90 சீட் என்றெல்லாம் ஆசை காட்டினார்கள். ஆனால் அவர் எதற்கும் மசியவில்லை என்று பேசினார். இவர்களின் இந்த பேச்சுக்கள் எல்லாம், தனித்து போட்டியிடுவதில் விஜய் உறுதியாக இருக்கிறார் என்பதை காட்டி சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்கும் நோக்கம் தான்.

வேறு எந்த அரசியல் தலைவராவது சிபிஐ அலுவலகத்தில் இருந்த திறந்த காரில் நின்றபடி வந்திருக்க முடியுமா. அதை சிபிஐ அனுமதித்திருக்குமா என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அதேபோல் எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்து ஒரே நாளில் கூட்டணியை அமித்ஷா உறுதி செய்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அதே பாணியில் விஜய்யையும் கூட்டணிக்குள் இழுத்து வந்திருக்கலாம். ஆனால் அமித்ஷா அவ்வாறு செய்யவில்லை. இருவரின் இந்த டீலிங்கை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றனர்.

Tags : Thimuka ,Amitsha ,Vijay ,Tamil Nadu Assembly General Election ,Daweka ,
× RELATED மோடி, அமித்ஷா சொன்னாங்க.. செஞ்சேன்…