×

தைலாபுரத்தில் உருவானது 5வது அணி ராமதாஸ்-சசிகலா புதிய கூட்டணி: எடப்பாடி, அன்புமணிக்கு சிக்கல்; என்டிஏவுக்கு பின்னடைவு

தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாதக என ஏற்கனவே நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட சசிகலா, கடந்த பிப்ரவரி 24ம் தேதி கமுதியில் நடந்த ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவில் சசிகலா அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

தன்னை ஒதுக்கிய எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன், பாஜவுக்கு பாடம் கற்பிக்க, ராமதாசுடன் சேர்ந்து புதிய கூட்டணையை உருவாக்கி அதிர்ச்சி தர சசிகலா திட்டமிட்டார். அதேபோல், பாமகவை இரண்டாக உடைத்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து உள்ள அன்புமணியை பழிதீர்க்க ராமதாஸ் முடிவு செய்தார். அதன்படி, கடந்த வாரம் தைலாபுரத்துக்கு சென்ற சசிகலா, ராமதாசை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, துரோகிகளை வீழ்த்த 5வது அணியை உருவாக்குவது, இருவரும் சேர்ந்து தென் மாவட்ட முக்குலத்தோர் வாக்குகளையும், வட மாவட்ட வன்னியர் வாக்குகளையும் ஒரு புள்ளியில் இணைக்க முயற்சிப்பது, தங்களை ஒதுக்கிய எடப்பாடி, டிடிவி, அன்புமணி, பாஜவினருக்கு பாடம் கற்ப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதால், நேற்று இருவரும் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவிக்கலாம் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி, சென்னையில் இருந்து ஜெயலலிதா பயன்படுத்திய சொகுசு கார் மூலம் நேற்று மாலை 5.35 மணியளவில் தைலாபுரம் தோட்டத்திற்கு சசிகலா சென்றார். அவரை பாமக செயல்தலைவர் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனை தொடர்ந்து தைலாபுரம் இல்லத்திற்கு சென்ற சசிகலா, ராமதாசுக்கு பூங்கொத்து கொடுத்தார். பின்னர் ராமதாஸ்- சசிகலா ஆகியோர் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, சசிகலாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

பின்னர், இருவரும் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யவில்லை. அதேசமயம் சசிகலா கட்சி சார்பில் தென்மாவட்டங்களை குறிவைத்தும், ராமதாஸ் தரப்பில் வடமாவட்டங்களை குறிவைத்தும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த கூட்டணியில் புதுச்சேரி செங்கோல் நீதி மக்கள் முன்னேற்ற கட்சி மற்றும் சிலர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய கூட்டணியால் தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகள் சிதறும் என்பதால், அவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

* 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் – ராமதாஸ் கெத்து
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ராமதாஸ் அளித்த பேட்டி: பாமகவும், அஇபுதமமுகவும் இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு செய்து ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், இந்த வெற்றிக் கூட்டணி, மிகப்பெரிய வெற்றியை, மிகப்பெரிய தாக்கத்தைத் தமிழ்நாட்டில் உண்டாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் வேண்டாம். இந்தக் கூட்டணியை நாங்கள் கையெழுத்திட்டது பல பேருக்கு நடுக்கத்தை உண்டாக்கி இருக்கிறது. 234 தொகுதிகளிலும் நாங்கள் இருவரும் போட்டியிடுவோம். கொள்கையளவில் உறுதியாக இருக்கின்ற எந்தக் கட்சி வந்தாலும் சசிகலாவுடன் கலந்து பேசி முடிவு செய்வோம்.

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும், நல்லது நடக்கணும்னுதான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். சில நேரங்களில், சில சமயங்களில் கால தாமதங்கள் நடப்பதும் உண்டு. அந்த வகையிலே இப்போது கொஞ்சம் கால தாமதம் ஆகியிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு, ‘முதல்வர் வேட்பாளர் நான்தான் என்று கிண்டலாக சொன்ன அவர், நான் தேர்தலில் நிற்க மாட்டேன். ஆனால், அவர்களுக்கு வாழ்த்து சொல்லி தலைவராக இருப்பேன்’ என்றார்.

* பலமான கூட்டணி: சிரிக்காமல் சொன்ன சசிகலா
தைலாபுரம் தோட்டத்தில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சசிகலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு சுமுகமான முடிவு எட்டப்பட்டு, இன்று (20ம் தேதி) ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் வந்து சந்தித்து, எங்களுக்குள் நல்ல பலமான ஒரு கூட்டணியை அமைத்துள்ளோம். வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களிலும் எங்களுடைய வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். மக்களுக்கான ஒரு நல்ல முடிவை ராமதாஸ் எடுத்து, நாங்களும் அவருடன் சேர்ந்து இந்தத் தேர்தலை சந்திக்கிறோம்’’ என்றார்.

Tags : Tailapuram ,Ramadoss ,Sasikala ,Edappadi ,Anbumani ,NDA ,Tamil Nadu Legislative Assembly elections ,Tamil Nadu ,DMK ,AIADMK ,Thaveka ,Nathak ,
× RELATED மோடி, அமித்ஷா சொன்னாங்க.. செஞ்சேன்…