கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே இம்முறை எந்த எம்பிக்கும் சீட் கிடையாது என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. ஆனால், ‘‘அதெல்லாம் எனக்கு கவலை இல்லை. கண்ணூர் சட்டப்பேரவை தொகுதியில் தான் போட்டியிடுவது 110 சதவீதம் உறுதி’’ என்று இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநில தலைவருமான சுதாகரன் கூறினார். இது, கேரள காங்கிரஸ் கட்சியில் கடும் நெருக்கடியை உருவாக்கியது. சுதாகரனின் இந்த தடாலடியைத் தொடர்ந்து தனக்கும் சீட் வேண்டும் என்று கேட்டு ஆற்றிங்கல் தொகுதி எம்பியான அடூர் பிரகாஷும் போர்க்கொடி தூக்கினார்.
அடூர் பிரகாஷை விட சுதாகரனுக்கு கண்ணூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம் என்பதால் சுதாகரனின் பிரச்னையை எப்படியாவது தீர்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டது. தனக்கு சீட் தராவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று சுதாகரன் எச்சரிக்கவும் தொடங்கினார். தொடர்ந்து, 10 வருடங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வெறுத்துப் போன காங்கிரசுக்கு இம்முறை எப்படியாவது கேரளாவில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, எந்தக் காரணம் கொண்டும் சுதாகரனை காங்கிரசால் கைவிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் சுதாகரன் 2 முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முதலில் எதற்குமே சுதாகரன் மசியவில்லை. கடைசியில் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தான் போட்டியிலிருந்து விலக அவர் சம்மதித்தார். இதன்பிறகு கண்ணூர் திரும்பிய சுதாகரன், எனக்கு கட்சி தான் முக்கியம், வேறு எதுவும் எனக்கு தேவையில்லை என்று கூறினார்.
இதன் பிறகு தான் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்தப் பிரச்னை முடியும் வரை கண்ணூர் தொகுதியில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காமல் இருந்தது. சுதாகரன் தன்னுடைய பிடிவாதத்தை கைவிட்டதை தொடர்ந்து கண்ணூர் தொகுதி வேட்பாளராக மோகனன் என்பவரை காங்கிரஸ் நேற்று அறிவித்தது. நேற்று இவர் கண்ணூரில் உள்ள சுதாகரனின் வீட்டுக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். மோகனனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருவதாக சுதாகரன் அவரிடம் வாக்குறுதியும் அளித்துள்ளார்.
* பிரபல நடிகர் சுதீரை நிறுத்த சிபிஎம் ஆலோசனை
இடதுசாரி கூட்டணியில் திருவனந்தபுரம் தொகுதி கூட்டணிக் கட்சியான ஜனநாயக கேரளா காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்சியில் வேட்பாளராக நிறுத்த தீர்மானித்திருந்த முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆண்டனி ராஜு ஒரு வழக்கில் சிக்கியுள்ளார். இதனால் இவரால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இதுவரை இந்தக் கட்சியில் வேட்பாளர் தேர்வு செய்யப்படவில்லை. தேர்தல் நெருங்கி வருவதால் இந்தத் தொகுதியில் பிரபல மலையாள நடிகர் சுதீர் கரமனாவை நிறுத்த சிபிஎம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
* என்.ஆர். காங்கிரசில் 2 அமைச்சர்கள் எம்எல்ஏவுக்கு கல்தா
திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, நேற்று புதுச்சேரி திரும்பிய முதல்வர் ரங்கசாமி, நேராக வீட்டுக்கு வந்து அங்கு தயாராக இருந்த நிரப்பப்பட்ட வேட்பு மனுக்களில் கையெழுத்துப் போட்டு, மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தட்டாஞ்சாவடியில் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள ரங்கசாமி, புதிதாக மங்கலம் தொகுதியிலும் கூடுதலாக வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார். மங்கலம் தொகுதி ஏற்கனவே அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் தொகுதியாகும்.
இதன் பின் ஒன்றிய அமைச்சர் மண்ஷுக் மாண்டயாவை சந்தித்து என்டிஏ கூட்டணியை உறுதி செய்தார். என்.ஆர். காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 16 தொகுதிகளில் தற்போது 2 அமைச்சர் மற்றும் 2 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இதனால் 2 அமைச்சர் மற்றும் 2 எம்எல்ஏக்களும் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளனர். சுயேச்சையாக போட்டியிடுவதா அல்லது வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதா என்பது உள்பட அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
* அப்பாடா… அசாமில் காங்கிரஸ் கூட்டணி இறுதி: 6 கட்சிகளுடன் அட்டகாசம்
அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அங்கு காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. அசாம் மாநில கட்சியான ரைஜோர் தளம் கட்சிக்கு 11 தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கி உள்ளது. பல நாட்களாக நடந்த இழுபறி பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே நட்புப் போட்டி நடைபெறவும் முடிவெடுக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஜோர்ஹட்டில் நடைபெற்ற நிகழ்வில், அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் மற்றும் ரைஜோர் தளம் கட்சித் தலைவர் அகில் கோகாய் ஆகியோரின் தலைமையில், இரு கட்சிகளின் தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதியான சிவசாகரிலிருந்து அகில் கோகாய் இம்முறை போட்டியிடுகிறார். அதே போல் அசாம் காங்கிரஸ் எம்பி பா.ஜவில் இணைந்ததால் அவரது மகன் பிரதீக் பர்தோலோஸ் போட்டியிட மறுத்த மார்கெரிட்டா தொகுதியை காங்கிரஸ் கட்சி, ரைஜோர் தளம் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதிகள் தவிர தல்கான், திங், சிசிபோர்கான், திக் போய், போக்காகாட், மனாஸ், தேஜ்பூர் மற்றும் காளியாபோர் தொகுதிகள் ரைஜோர் தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கோல்பாரா (கிழக்கு) மற்றும் கௌரிப்பூர் ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே நட்புப் போட்டி நடைபெறும்.
தற்போதைய காங்கிரஸ் கூட்டணியில் ஆறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவை காங்கிரஸ், ரைஜோர் தளம், அசாம் ஜாதிய பரிஷத், மார்க்சிஸ்ட், அனைத்துக் கட்சிகள் மலைவாழ் மக்கள் தலைவர்கள் மாநாடு மற்றும் சிபிஐ(எம்எல்) ஆகியவை ஆகும். காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் 87 தொகுதிகளுக்கான முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அசாம் ஜாதிய பரிசத் கட்சி 10 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் மற்றும் மலைவாழ்மக்கள் தலைவர்கள் மாநாடு கட்சி ஆகிய கட்சிகள் தலா இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ரைஜோர்தளம் கட்சி 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
* பாபர் மசூதி ஆதரவு அதிகரிப்பு: மேற்குவங்கத்தில் முஸ்லிம் முதல்வர் அல்லது துணை முதல்வர் வரலாம்; திரிணாமுல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஹுமாயூன் கபீர் சொல்கிறார்
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை போல் மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஹூமாயூன் கபீரை கட்சியில் இருந்து நீக்கி முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்தார். இருப்பினும் அவர் நிதி வசூலித்து பாபர் மசூதி கட்டும் பணியை தொடங்கி விட்டார். மேலும் ஆம் ஜனதா உன்னயன் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய ஹூமாயூன் கபீர், மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக, அடுத்த மேற்குவங்க அரசாங்கத்தில் ஒரு முஸ்லிம் முதல்வர் அல்லது துணை முதல்வர் அமையக்கூடும். மேற்குவங்கத்தில் உள்ள முஸ்லிம்களிடையே வளர்ந்து வரும் அரசியல் சுயஉறுதி உணர்வு, தேர்தல் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடும். எனது கட்சி, ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் கூட்டணியமைத்து 182 தொகுதிகளில் போட்டியிடும். தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு பிளவுபட்ட தீர்ப்பை அளித்தால், அரசாங்கம் அமைப்பதில் எனது கட்சி ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்கக்கூடும். எங்கள் கட்சி அரசாங்கத்தை அமைத்தால், முதல்முறையாக ஒரு முஸ்லிம் முதல்வர் பதவியேற்பார்.
ஆனால் நாங்கள் அரசாங்கத்தை அமைக்காவிட்டாலும் கூட, எங்களைச் சேர்க்காமல் எந்த அரசாங்கத்தையும் அமைக்க முடியாத அளவுக்குப் போதுமான இடங்களை நாங்கள் கைப்பற்றுவோம. அத்தகைய சூழ்நிலையில், நான் துணை முதல்வர் பதவியைக் கோருவேன். இதை நான் தெளிவாகச் சொல்கிறேன் — இந்தத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஒரு முஸ்லிம் முதல்வர் அமையாவிட்டாலும் கூட, நிச்சயமாக ஒரு முஸ்லிம் துணை முதல்வர் அமைவார். இதை நீங்கள் என்னிடமிருந்து எழுத்துப்பூர்வமாகவே பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
