×

பாஜ, பாமகவுடன் கூட்டணி இல்லை: திருமாவளவன் மீண்டும் திட்டவட்டம்

 

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஜி.என். பாளையம் கிராமத்தில் உள்ள குழந்தை முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: அமெரிக்க அதிபர் டிரம்பின் சதி முயற்சிக்கு மோடி பலியாகிவிட்டார். எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவொரு சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மிகுந்த மரியாதை உண்டு. வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதால், பாஜ, பாமக கட்சிகள் இடையே தேர்தல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று உறுதியான முடிவை எடுத்து உள்ளோம். இது கொள்கை சார்ந்த முடிவு.

திமுக-காங்கிரஸ்-இடதுசாரிகள் கொண்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் புதுச்சேரியிலும் உள்ளது. புதுச்சேரியில் திமுக நியமிக்கின்ற குழு தான் விசிக மற்றும் பிறகட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராகிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் யார் தலைமை வகிக்கிறார்கள் என்பதை, அதன் சூழலை பொறுத்து முடிவு செய்வார்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். ஆகவே அதில் நாங்கள் இணக்கமான முடிவை மேற்கொள்வோம். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த முறை பொது தொகுதி மற்றும் தனி தொகுதி ஆகிய இரண்டு வகையான தொகுதிகளை கேட்டு பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கமல் பதிலடி: கதறும் பாஜ

‘‘தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு, ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பில் கமல்ஹாசன் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த பதிலடியை தாங்கமுடியாமல் தான் பாஜவினர் கதறுகிறார்கள். வாய்க்கு வந்ததை சொல்லி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். கமல்ஹாசன் உரைக்கு கோனார் உரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான் அவர்களின் தமிழ் ஞானம்.உரைநடையைக் கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியாமல் கோனார் உரையை தேடும் அளவுக்கு தமிழை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள்’’ என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Tags : BJP ,PMK ,Thirumavalavan ,Puducherry Villianur ,G.N. Palayam ,Kumbabhishekam ,Muthu Mariamman ,Liberation Tigers of Tamil Nadu Party ,Modi ,US ,President Trump… ,
× RELATED சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி...