சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நிதித்துறைச் செயலர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு மே 19ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு, ஒரு கோடி ரூபாய் தனிநபர் விபத்து காப்பீடு கிடைக்கும்.
இதுதவிர தனிப்பட்ட விபத்து காரணமாக ஊழியர் இறக்கும் பட்சத்தில், ஊழியரின் குழந்தைகளுக்கு கல்விச் சலுகைகளும், திருமணமாகாத மகள்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கப்படும். இந்த வசதிகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய 7 வங்கிகள் இதுவரை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில் இப்போது கூடுதலாக பஞ்சாப் நேஷனல் வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி (டிஎன்எஸ்சி), பாங்க் ஆப் இந்தியா ஆகிய 3 வங்கிகளுடன் இப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி மேற்கண்ட 3 வங்கிகளும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மேற்கண்ட சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
