- அமித் ஷா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நைனார் பிரஷார யாத்திரை
- புதுக்கோட்டை
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- நயினார் நாகேந்திரன் யாத்திரை
- ஸ்ரீரங்கம்
- பொங்கல் திருவிழா
- திருச்சி.…
புதுக்கோட்டை: நயினார் நாகேந்திரன் பயண நிறைவு விழா கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜன.4ம்தேதி புதுக்கோட்டை வருகை தருகிறார். தொடர்ந்து, ஜன.5ம் தேதி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்யும் அவர், திருச்சியில் பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’’ பிரசார பயணத்தை பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். மதுரையில் தொடங்கிய இந்த பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் ஜன.4ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால அவரது பயணம் மாற்றப்பட்டு தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தருவது உறுதியாகியுள்ளது. இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பாஜ தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஜி.கே.வாசன், பாரிவேந்தர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலன் நகர் அருகே 45 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு தற்போது முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திருச்சி அல்லது மதுரைக்கு தனி விமான மூலம் வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தர உள்ளார். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் விழா நடைபெறும் இடத்தை நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள், எந்தெந்த மாவட்டத்தில் இருந்து எத்தனை வாகனங்கள் வரும்? பார்க்கிங் வசதி உள்ளதா? உள்துறை அமைச்சர் வருகை தரும் ஹெலிகாப்டர் தளம் எங்கு அமைக்கப்பட உள்ளது? பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் எந்த வழியாக வருவார்கள். எந்தெந்த இடங்களின் வழியாக வெளியேறுவார்கள், எவ்வளவு எண்ணிக்கையில் போலீசார் தேவைப்படுவார்கள், விழா மேடையின் அமைப்பு விவரம் குறித்து எஸ்பி கேட்டறிந்தார்.
ஜன.4ம் தேதி புதுக்கோட்டை நிகழ்ச்சியை அமித்ஷா முடித்து விட்டு, இரவு திருச்சியில் தங்க உள்ளதாக தெரிகிறது. மறுநாள் (5ம்தேதி) ஸ்ரீரங்கம் கோயிலில் அமித்ஷா தரிசனம் செய்யவுள்ளதாகவும், அன்றையதினமே பொங்கல் பண்டிகையையும் திருச்சியில் அவர் கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
