×

திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்

 

குலசேகரம்: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக குமரி மாவட்டத்தின் பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுகிறது. ஆகவே குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை காணப்படுகிறது. குறிப்பாக விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் மிகுதியாக காணப்படும். ஆகவே பயணிகளை கவரும் வகையில் பூங்காக்கள், சிறுவர் நீச்சல் குளம் போன்றவை உள்ளன. பெரிய சுற்றுலா தலங்களில் உள்ளது போன்ற நவீன தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் இங்கும் இருக்கிறது.

வெளியூர்களில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 2 மாத காலமாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சில நாட்களாக மழை இல்லாத நிலையிலும், தற்போது குளிர்காலம் என்பதால் எப்போதும் ஜில்லென்ற காலநிலை நிலவுகிறது. மழை காரணமாக திற்பரப்பு அருவியின் எல்லா பகுதிகளிலும் வெள்ளம் பரந்து விரிந்து மிதமான அளவு கொட்டுகிறது. காலையில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேரம் செல்ல செல்ல குளிர் குறைகிறது. ஆனாலும் தண்ணீர் குளிர்ச்சியாக விழுகிறது. இதமான காற்றும் வீசுவதால் குளு குளு சீசன் நிலவுகிறது.

இந்த சூழல் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்கிறது. குளிக்கும் ஆவலுடன் வரும் பயணிகள் அருவி, அருகில் உள்ள நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடி மகிழ்கின்றனர். இதே போன்று திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணை கடந்த 2 மாத காலமாக நிரம்பி வழிகிறது. இங்கு நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் ஆவலுடன் படகுகளை ஓட்டி சென்று கடல்போல் தேங்கி நிற்கும் தடுப்பணையின் அழகையும், கோதையாற்றின் இயற்கை எழிலையும் பார்த்து மகிழ்கின்றனர்.

 

Tags : Kulasekaram ,Kumari district ,Kanyakumari ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு...