சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு டிசம்பர் 15ம் தேதி வரை கெடு விதித்த, ஓ.பன்னீர்செல்வம், நேற்று திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் அமித்ஷாவை சந்தித்த பிறகு அதிமுகவில் இணைவது அல்லது தனிக்கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன் பின்னர் கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி, அந்தப் பதவியை கைப்பற்றினார். எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம் உள்ளிட்ட சிலரும், 4 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது முதல் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அவர் குரல் கொடுத்து வருகிறார். அதேநேரத்தில் பாஜ கட்டணியில் இருந்து வெளியேறிய பாஜவுடன் கடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின்னர், சில நாட்களில் அதிமுக, பாஜ கூட்டணி ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த அண்ணாமலை, கட்சியில் மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் பாஜ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஒதுக்கி வைக்கப்பட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகம் வரும்போது சந்திக்க நேரம் கேட்டபோது எல்லாம் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதாக அறிவித்தார்.
ஆனாலும், அதிமுகவில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வந்தார். அதே கோரிக்கையை தெரிவித்த செங்கோட்டையன், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால், தவெகவில் சேர்ந்து விட்டார். இந்தநிலையில், கடந்த வாரம் சென்னையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், வருகிற 15ம் தேதி வரை எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார். அதற்குள் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதிரடி முடிவுகளை எடுப்பேன் என்றார். இதனால் அவர் புதிய கட்சியைத் தொடங்கி, தவெக கூட்டணிக்கு செல்வதைத்தான் குறிப்பிடுகிறார் என்று கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் திடீரென்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
அமித்ஷாவிடம், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள நீங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தான் தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவிப்பதற்காக புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அமித்ஷாவின் அழைப்புக்காக டெல்லியில் காத்திருக்கிறார். அனுமதி கிடைக்காவிட்டாலோ, சாதகமான பதில் கிடைக்காவிட்டாலோ, புதிய கட்சியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் செய்து விட்டுத்தான் திரும்புவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன்னர்தான் அதிமுகவில் இருந்து வெளியேறினார். தற்போது அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பிரச்னையை தொடங்கியுள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
