×

25 ஆயிரம் பேர் திரண்ட இடத்தில் 41 பேர் பலியான நிலையில் 1.5 லட்சம் பேர் திரண்ட கூட்டத்தில் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படவில்லை: வாய் பிளக்கும் அரசியல் கட்சி தலைவர்கள்

சென்னை: கரூரில் 25 ஆயிரம் பேர் கூடிய கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில் திருவண்ணாமலையில் 1.5 லட்சம் பேர் திரண்டு கூட்டம் நடத்தினாலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு, சாப்பாட்டு பிரச்னை, குப்பை பிரச்னை என்று எந்த சிறு சம்பவங்களும் கூட நடக்காமல் ராணுவ கட்டுக்கோப்பாக நடந்த நிகழ்ச்சி அனைவராலும் வியந்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. கரூரில் நடிகர் விஜய் பிரசாரத்துக்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதனால் தமிழகத்தில் எங்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி அளிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், புதுச்சேரியில் நடிகர் விஜய் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடத்திய பொதுக்கூட்டமும் ஒருவித அச்சத்தோடுதான் நடத்தப்பட்டது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சிகளின் கூட்டம் என்றாலே ஒரு அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணியினர் 1.30 லட்சம் பேர் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தை நடத்தும் பொறுப்பு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கமாக எந்த நிகழ்ச்சி என்றாலும் மிகவும் திட்டமிட்டு, நேர்த்தியாக செய்யக்கூடியவர் எ.வ.வேலு.

தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு பாலங்கள் குறிப்பாக கோவையில் ஜி.டி.நாயுடு மேம்பாலம், மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம் மற்றும் சென்னையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு சொன்ன காலத்தில் திறக்கப்பட்டுள்ளன. அதேபோலத்தான், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலும், கோயம்பேடு முதல் மதுரவாயல் வரையிலும் மேம்பாலம் கட்டும்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாலங்கள் தேர்தலுக்கு முன் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோலவே, இந்த கூட்டத்திற்கு திட்டமிடலை தொடங்கினார் எ.வ.வேலு, திருவண்ணாமலையில் தனியார் கம்பெனிக்குச் சொந்தமான 140 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு பேசினார்.

ஏற்கனவே, திமுக பாக முகவர்கள் கூட்டம் 2 முறை அதே இடத்தில் அமைச்சர் வேலு நடத்தினார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதனால் 1.5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் திட்டமிடலை தொடங்கினார். மொத்தம் 91 தொகுதிகளில் உள்ள 1.30 லட்சம் இளைஞர் அணியினர் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டது. இவர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள மற்ற கிளை நிர்வாகிகள் என 20 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என கணக்கிடப்பட்டது. இதற்காக மேடை முன்பு 1.40 லட்சம் இருக்கைகள் போடப்பட்டன.

மேடை மட்டும் 80 அடி அகலத்தில், 50 அடி நீளத்தில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. திருவண்ணாமலை நகரமே மலையை வைத்து வந்ததால், மேடையும் மலைபோல செட் போடப்பட்டது. மலைக்குள் மேடை அமைக்கப்பட்டது.
ஏற்கனவே அங்கு 3 வழிப்பாதைகள் இருந்தன. அதாவது திண்டிவனம்-திருவண்ணாமலை சாலை, வடபகுதி-அவளூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை பைபாஸ்-வாணியம்பாடி சாலை என 3 சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. மேலும் நகரத்திற்குள் வருவதற்கு 9 சாலைகள் உள்ளன. அந்த சாலைகள் கணக்கிடப்பட்டன. 9 சாலைகள் வழியாக மாநாட்டு திடலுக்கு வரவும், அதே சாலைகளில் திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டன.

அதேநேரத்தில் மாநாடு முடிந்தவுடன் எல்லோரும் மொத்தமாக புறப்படுவார்கள். அவர்கள் சாப்பாடுக்கு ஒரே இடத்தில் ஏற்பாடு செய்தால் தள்ளுமுள்ளு ஏற்படும். ஒரே நேரத்தில் 1.50 லட்சம் பேர் சாப்பிட வசதி இருக்காது. சாப்பிட்ட பின்னர் சாப்பாட்டு தட்டுகள், தண்ணீர் பாட்டில்கள் கண்ட இடத்தில் போடப்பட்டால் குப்பை ஏற்படும். இதனால் சாப்பாட்டை சுடச் சுட தயாரித்து, நகரில் இருந்து வெளியே செல்லும் 9 சாலைகளில் பாதுகாக்கப்பட்ட கூண்டு வண்டிகள் தயாராக நிறுத்தப்பட்டன. அதில் நகரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கூண்டு வண்டிகள் நிறுத்தப்பட்டன. மொத்தம் 29 கட்சி மாவட்ட நிர்வாகிகள் வந்தனர். இதனால் அவர்கள் வெளியே செல்லும் 9 சாலைகளான கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், சென்னை என 9 சாலைகளில் இந்த புட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டன.

மேலும், தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் சிறப்பு வாய்ந்த பிரியாணி தயாரிக்கும் ஓட்டல்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டன. ஒருவரிடம் ஆர்டர் கொடுத்தால் தாமதம் ஆகும் என்பதால் ஒருவருக்கு 10 ஆயிரம்பேருக்கு மட்டும் பிரியாணி தயாரிக்கும் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டன. மொத்தம் தலப்பாக்கட்டி உள்பட தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த 15 ஓட்டல்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் சுடச் சுட மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, இனிப்பு, பச்சடி, தொக்கு என சகலமும் இடம்பெற்ற கன்டெய்னர் பாக்ஸ்கள் தயாரிக்கப்பட்டன.

மேலும் 60 பாக்ஸ், 40 பாக்ஸ், 20, 6 பாக்ஸ் கொண்ட அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டன. பஸ் வந்தால் 60 கன்டெய்னர் கொண்ட பெட்டி, கார் என்றால் 6, வேன் என்றால் 20, மினி பஸ் என்றால் 40 கன்டெய்னர் கொண்ட பாக்ஸ்கள் பெட்டி வழங்கப்பட்டன. கூட்டம் முடிந்து வாகனங்களில் நகரை கடந்தவுடன் மின்னல் வேகத்தில் பிரியாணி, தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டன. அவர்கள் தாங்கள் செல்லும் வழிகளில் விரும்பும் இடங்களில் வாகனத்தை நிறுத்தி சாப்பிட்டனர். சாப்பாட்டை மட்டும் கவனிக்க சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் 10 எம்எல்ஏக்கள் கொண்ட டீம் அமைக்கப்பட்டது.

இவர்கள் பம்பரமாக சுழன்று பணிகளை செய்தனர். இதனால் நிகழ்ச்சி முடிந்து நகரை விட்டு சென்றவுடன் ஒரு நிமிடத்துக்குள் சாப்பாடு வழங்கப்பட்டு நகரை காலி செய்து விட்டுச் சென்றனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இல்லை. சாப்பாட்டுக்காக தள்ளுமுள்ளு இல்லை. ஒரே இடத்தில் குப்பை தேங்கவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்படவில்லை. சாப்பாட்டுக்காக யாரும் அடித்துக் கொள்ளவில்லை. அதோடு மேடை முன்பு இளைஞர் அணி நிர்வாகள் 1.30 லட்சம் பேர் மட்டும் தனியாக வெள்ளை பேண்ட், டி.சர்ட், தொப்பி அணிந்து அமர்ந்திருந்தனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மற்ற அணி நிர்வாகிகள் தனியாக அமர வைக்கப்பட்டனர்.

இதனால்தான் ஒரு ராணுவ அணிவகுப்பு போன்று இளைஞர் அணியினர் ஒன்றுபோல காட்சி அளித்தனர். ஒரு ராணுவ கட்டுக்கோப்புடன் சரியான திட்டமிடலுடன் இந்த நிகழ்ச்சி நடந்ததைக் கண்டு அனைத்து அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது இயக்கங்களும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலையை அமைச்சர் எ.வ.வேலு ஏற்படுத்தியுள்ளார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமைச்சர் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களை அழைத்து பாராட்டினர். இனி அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இது முன்னுதாரணம் என்பதால் திமுக மட்டுமல்லாது, மற்ற கட்சிகளும் இந்த மாநாடு குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Chennai ,Tiruvannamalai ,Karur ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...