- சிபிஐ(எம்)
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- சிபிஐ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மோடி அரசு
- சென்னை
- மாநில செயலாளர்
- பி.சண்முகம்
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசை கண்டித்து, வரும் 23ம்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று விசிக மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சி மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூக சொத்துகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வறுமை நிலை ஓரளவு குறைந்ததற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் அடிப்படை காரணமாகும்.
ஆனால், கடந்த 2014ம் ஆண்டில் ஒன்றிய அரசின் அதிகாரத்தை கைப்பற்றிய பாஜ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, உரிய காலத்தில் நிதி வழங்காமல் இழுத்தடிப்பது என அடியோடு அழித்தொழிக்கும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய பாஜ அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு, வளர்ந்த பாரதம்-வேலைக்கான உறுதியளிப்பு மற்றும் ஊரக வாழ்வாதாரம் திட்டம் 2025 என்ற புதிய மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மகாத்மா காந்தியின் பெயரையும் கூட சகிக்க முடியாமல் அவரின் பெயரிலான திட்டத்தையும் படுகொலை செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கான செலவில் 40 சதவீதம் தொகையை மாநில அரசின் தலையில் சுமத்துகிறது. இதனால் மாநில அரசுகள் கூடுதல் நிதிச் சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்த புதிய திட்டத்தில், ஒன்றிய அரசின் பொறுப்புகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டு, கிராம ஊராட்சிகளுக்கு வழங்கிய அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 23ம்தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்ட, ஒன்றிய தலைநகரங்களில் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளன. இந்த முடிவின்படி இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்புகள், ஒருங்கிணைந்து, ஊரகப் பகுதி உழைக்கும் மக்களை பெருமளவில் திரட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்த கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
