- சுயவிவரம்
- சண்முகம்
- அன்புமணி
- சட்டமன்ற உறுப்பினர்
- விக்கிரவாண்டி
- விழுப்புரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக
- அஇஅதிமுக
- பா.ம.க.
- காங்கிரஸ். ...
விழுப்புரம்: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கூட்டணி பேச்சு, வேட்பாளர்கள் தேர்வு, போன்ற பல்வேறு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். மாஜி அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியை தக்க வைக்கவும், தோல்வியடைந்தவர்கள் மீண்டும் வெற்றிபெற தங்களுக்கு ஏதுவான தொகுதிகளுக்கு காய் நகர்த்தி துண்டுபோட்டு வருகின்றனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதிகள் திமுக வசமும், திண்டிவனம், வானூர் தொகுதிகள் அதிமுக வசமும், மயிலம் தொகுதி பாமக வசமும் இருக்கிறது. விழுப்புரத்தில் அதிமுக விஐபி வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கும் அவர் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட கட்சியில் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே திண்டிவனத்தில் 2 முறை, விழுப்புரத்தில் 2 முறை வெற்றிபெற்ற அவர் மூன்றாவது முறையாக விழுப்புரத்தில் போட்டியிட்டபோது படுதோல்வியடைந்தார். இதனால் வரவுள்ள தேர்தலில் தொகுதி மாறி தனது சொந்த ஊரான மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். மயிலம் தொகுதியில் பாமகவில் அன்புமணி ஆதரவாளர் சிவக்குமார் எம்எல்ஏவாக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர் சி.வி.சண்முகத்தின் ஆதரவோடு அங்கு வெற்றி பெற்றார்.
இந்த தொகுதியை தற்போது சி.வி.சண்முகமே குறி வைத்துள்ளதால் அவரை எதிர்த்து நின்று வெற்றிபெற முடியாது என சிவக்குமார் கருதுகிறார். மேலும், கூட்டணி இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் இப்போதே தொகுதியை மாற்றி களப்பணியை தொடங்க முடிவு செய்து, ஏற்கனவே தான் ஆசைபட்ட மாதிரி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதல்கட்ட காய்களை சிவக்குமார் நகர்த்தி வருகிறாராம். இதற்காக தற்போதே முதல்நபராக அந்த தொகுதியில் துண்டுபோட்டு இடம் பிடித்திருக்கிறாராம் சிவக்குமார்.
இதற்காக சௌமியா அன்புமணியை அழைத்து வந்து மகளிர் உரிமை மீட்பு பயணம் என்ற நிகழ்ச்சியின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு தடபுடல் பிரியாணி விருந்து வைத்தும், ‘ப’ விட்டமின்களை நிர்வாகிகளுக்கு அள்ளி கொடுத்தும் இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலையை துவங்கி உள்ளாராம். சவுமியா அன்புமணியை விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் அழைத்து வந்து மகளிர்கள், நிர்வாகிகளை அழைத்து பேசி, புகைப்படம் எடுத்துவிட்டு சென்றதன் மூலம் இதனை உறுதி செய்துள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். கடந்த இடைத்தேர்தலில் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் பாமக கணிச்சமான வாக்குகள் பெற்றதால், விக்கிரவாண்டி தொகுதியை மயிலம் சிட்டிங் எம்எல்ஏ டிக் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
தன்னை வெற்றிபெற வைத்த சி.வி.சண்முகத்திற்கு தொகுதியை விட்டுக் கொடுத்த மாதிரியும் ஆச்சு, அதேசமயம் தற்போது பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி, விக்கிரவாண்டி ெதாகுதியில் போட்டியிட ஏற்பட்டிருக்கும் வாய்ப்பையும் முன்கூட்டியே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கணக்கில் இருக்கிறாராம். ஆனால் இந்த தொகுதியில் 2 முறை போட்டியிட்டு அன்புமணி அணியில் தற்போது இருக்கும் முன்னாள் வேட்பாளர் அன்புமணியும், போர்க்கொடி தூக்கும் பட்சத்தில் கட்சித் தலைமைக்கு வேட்பாளர் தேர்வில் நெருக்கடி ஏற்படலாம். இதையெல்லாம் சமாளிக்கதான் சவுமியாவை அழைத்து வந்து நிகழ்ச்சியை பிரமாண்ட செலவில் நடத்தி விக்கிரவாண்டி தொகுதிக்கு சிவக்குமார் உஷாராக துண்டு போட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவுகிறது.
