×

கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் குழு: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில், தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலுக்கான பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் வந்தால் திமுக அறிவிக்கும் தேர்தல் வாக்குறுதிகள் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாக இருக்கும். இந்நிலையில், வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. அதற்காக, திமுக தனது தேர்தல் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட திமுக தலைமையால் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், சொத்து பாதுகாப்பு குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஜி.சந்தானம், ‘கனவு தமிழ்நாடு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அத்தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இப்பொழுதும் அவரது தலைமையிலேயே குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 முனைவர் பட்டம் பெற்றவர்கள், ஒரு பேராசிரியர், ஒரு மருத்துவர், ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஒரு தொழில் முனைவோர் என தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரால் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், கனிமொழி, தமிழரசி என 2 பெண்கள் உள்ளனர். குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகேய சிவசேனாபதி, எம்.எம்.அப்துல்லா, டாக்டர் எழிலன் உள்ளிட்ட அறிவார்ந்த அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜி.சந்தானம், வன்னியர் பொது சொத்து நல வாரிய தலைவராகவும், சிஎம்டிஏ துணைத் தலைவராகவும் இருந்தார். இக்குழுவினர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து 2026 சட்டப் பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

Tags : DMK ,General Secretary ,Duraimurugan ,Kanimozhi ,Chennai ,Deputy General Secretary ,2026 Legislative Assembly elections ,Tamil Nadu… ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...