×

புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுத்த காவல்துறை: திறந்தவெளியில் பொதுக்கூட்டமாக நடத்த பரிந்துரை

புதுச்சேரி: புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5ம்தேதி ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு கடந்த 25ம்தேதி முதல்வர் ரங்கசாமி மற்றும் காவல்துறை தலைமையகத்தில் புதுச்சேரி தவெக நிர்வாகிகள் மனு அளித்தனர். கடற்கரை சாலை காலாப்பட்டில் தொடங்கி கன்னியகோயில் வரை 25 கிமீ சாலை மார்க்கமாக மக்களை சந்திக்கவும், உப்பளம் சோனாம்பாளையத்தில் ஒலிபெருக்கி மூலம் உரையாற்றவும் அனுமதி கேட்டது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது.

கரூர் துயர சம்பவத்துக்குபின் ரோடு ஷோ நடத்த அம்மாநில அரசின் வழிகாட்டுதல், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் புதுச்சேரி காவல்துறை பின்வாங்குவதாக கூறப்பட்டது. மேலும் குறுகிய சாலையான சோனாம்பாளையத்தில் தமிழகத்தில் இருந்தும் அதிகளவில் ரசிகர்கள் குவிந்தால் அசம்பாவிதம் ஏற்படலாம் என்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதையடுத்து கடந்த 29ம்தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பாஜ முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோர் டிஜிபி, ஐஜியை சந்திக்க வந்தனர். அங்கு இருவரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பின்னர் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து பேசிய நிலையில், தவெக கூட்டத்துக்கு தலைமை செயலர், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தார். இதனால் விஜய்யின் ரோடு ஷோ திட்டமிட்டபடி 5ம்தேதி புதுச்சேரியில் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று முன்தினம் மீண்டும் புதுச்சேரி ஐஜி அஜித்குமார் சிங்லாவை சந்தித்து மனு கொடுத்து, விஜய் ரோடுஷோவுக்கு அனுமதி தருமாறு வலியுறுத்தினார்.

இதற்கிடையே விஜய் ரோடு ஷோவிற்கு தவெகவினர் அனுமதி கேட்டது தொடர்பாக டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிஐஜி சத்தியசுந்தரம்; புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை. விஜய் வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம்” என்று தெவித்தார்.

Tags : Vijay ,Puducherry ,Sathya Sundaram ,Vijay Road Show ,President ,December 5th ,Road Show ,Chief Minister ,Rangasami ,
× RELATED இளைஞரணி மாநிலத் தலைவர் அமர்நாத்...