புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பார் என அறிவித்தது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது: வி.சி.க. புறக்கணிப்பு

சென்னை: நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அதில், இரு அவைகளுக்கும் தலைவரான ஜனாதிபதியை அழைக்காமல் அவரை அவமதிப்பதால் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக வி.சி.க. தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பார் என அறிவித்தது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதியே ஆவார். சிறப்பு அதிகாரங்கள் கொண்ட குடியரசுத் தலைவரை அவமதிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பெயரைக்கூட அழைப்பிதழில் குறிப்பிடாமல் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நடைபெறுகிறது.

பழங்குடியினத்தவரை ஜனாதிபதி ஆக்கினோம் என தேர்தல் ஆதாயத்துக்காக பேசிய பாஜக, அவரை அவமதிப்பது ஏன்? என வி.சி.க. கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற கட்டட அடிக்கல் விழாவின்போது அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பாஜக அரசு அழைக்கவில்லை. பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் சனாதன கொள்கையை உயிர்மூச்சாக கொண்டுள்ளது பாஜக என விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக சாடியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

The post புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பார் என அறிவித்தது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது: வி.சி.க. புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: