புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் கார் பழுதாகி நின்றதால் கார் ஷோரூம் முன் வாலிபர் தர்ணா

தாம்பரம்: தாம்பரம் அருகே எலக்ட்ரிக் கார் வாங்கிய 3 மாதத்தில், 3 முறை பழுதாகி நடுரோட்டில் நின்றதால், கார் ஷோரூம் முன்பு, காருடன் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் ராஜேஷ் (35). சென்னையில் உள்ள தனியார் பைக் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள மகேந்திரா ஷோரூமில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள மகேந்திரா எக்ஸ்.யூ.வி 400 என்ற எலக்ட்ரிக் காரை வாங்கி உள்ளார். இந்த கார் வாங்கிய நாளிலிருந்து அடிக்கடி பழுது ஏற்பட்டு, நடுவழியில் நின்றுள்ளது. அவ்வாறு கடந்த 3 மாதத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 3 முறை கார் நடுவிழியில் நின்றுள்ளது.

இதனால் ராம் ராஜேஷ், சம்பந்தப்பட்ட ஷோரூமில் தொடர்ந்து புகார் அளித்ததன்பேரில், கார் ஷோரூமில், கார் பழுது சரிபார்க்கப்பட்டு மீண்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல ராம் ராஜேஷ், புதிய எலக்ட்ரிக் காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மீண்டும் கார் நடுரோட்டில் பழுதாகி நின்றதால், சம்மந்தப்பட்ட குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டருக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.

ஆனால் ஷோரூம் ஊழியர்கள் புகார் அளித்த, 6 மணி நேரத்திற்கு பிறகு வந்து, காரை எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ராம்ராஜேஷ், குரோம்பேட்டை மகேந்திரா ஷோரூமிற்கு சென்று, ஊழியர்களிடம் ஏன் இவ்வாறு அடிக்கடி கார் பழுதாகி விடுகிறது, என்று கேட்டுள்ளார். அப்போது, ஊழியர்கள் சரியாக பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராம் ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் கார் ஷோரூம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்த குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ராம் ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் கார் பழுதாகி நின்றதால் கார் ஷோரூம் முன் வாலிபர் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: