சென்னையில் மோசமான வானிலை காரணமாக 14 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை: மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கவுகாத்தி, ஷீரடி ஆகிய நகரங்களுக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய 7 விமானங்களும், இந்த நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும், மொத்தம் 14 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மேலும், லண்டன், சிங்கப்பூர், மும்பை விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் இருந்து கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கவுகாத்தி ஆகிய பெரு நகரங்களுக்கு செல்ல வேண்டிய 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், ஷீரடி செல்லக்கூடிய தனியார் பயணிகள் விமானம் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள், அதேபோல மேற்கண்ட பெருநகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் நேற்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதேபோல், சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நேற்று 6 மணி நேரம் தாமதமாகவும், சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 8 மணி நேரம் தாமதமாகவும், மும்பை, ஐதராபாத் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.கடந்த 3 நாட்களாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்களான கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கவுகாத்தி மற்றும் சர்வதேச விமானங்கள், முன் அறிவிப்பின்றி தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக விமானங்கள் ரத்து அல்லது பல மணி நேரம் தாமதம் போன்றவைகள் காரணமாக, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்கும் பலகைகளிலும் முறைப்படி எந்த அறிவிப்புகளும் வெளியிடுவது இல்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்த விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் ஆகியவற்றுக்கு காரணம், நிர்வாகம் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று, ஒரே வரியில் விமான நிறுவனங்கள் பதில் கூறுகின்றனர். என்ன காரணம் என்று பயணிகளுக்கு தெளிவாக அறிவிப்பு எதுவும் செய்யவில்லை.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடந்த சில தினங்களாக ரத்து செய்யப்படுவதற்கு காரணம், போதிய விமானிகள் பணியில் இல்லாததால், விமானங்களை இயக்க விமானிகள் இல்லாமல் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஷீரடி விமானம் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்படுகிறது. மும்பை விமானங்கள், அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சிங்கப்பூர் லண்டன் விமானங்களும், அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக, சென்னைக்கு தாமதமாக வந்துவிட்டு, தாமதமாக புறப்பட்டு செல்கின்றன,’’ என்றனர்.

The post சென்னையில் மோசமான வானிலை காரணமாக 14 விமானங்கள் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: