சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணிகள் நாளை தொடங்குகிறது: தன்னார்வலர்களுக்கு பயிற்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 ஆண்டுகளுக்கு பிறகு, தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணிகள் நாளை தொடங்குகிறது. இதற்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. சென்னை மாநகராட்சி நிர்வாகம், உலகளாவிய கால்நடை சேவை நிறுவனம், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாம், ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதனை, மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதனடிப்படையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. மாநகராட்சியில் 2018ம் ஆண்டு 59 ஆயிரம் தெருநாய்கள் இருந்தன. தற்போது பல்வேறு கருத்துக்களின் அடிப்படையில் ராயபுரம் மண்டலத்தில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இந்த கணக்கெடுப்பு பணியினை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக உலகளாவிய கால்நடை சேவை நிறுவனத்துடன் இணைந்து பணியினை மேற்கொள்ள பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வற்கான வழிமுறைகள் குறித்தும், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், ஆண் அல்லது பெண் நாய்கள் என அனைத்து விவரங்களையும் சேகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் தெருநாய்களை பொறுத்தவரை, இந்த ஆண்டு 10,100 நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றில் 7,265 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 1,05,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளைப் பொறுத்தவரை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது அபராத தொகையை அதிகரித்த காரணத்தினால் கடந்த ஆண்டை விட 50 விழுக்காடு புகார்கள் குறைந்துள்ளது. இதுநாள்வரை, சாலையில் திரிந்த 1,251 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. 3வது முறையாக பிடிபடும் மாடுகளை வெளியேற்ற கால்நடைத் துறையுடன் இணைந்து இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. செல்லப்பிராணிகளைப் பொறுத்தவரை, 3 புதிய செல்லப்பிராணிகளுக்கான மையம் மற்றும் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் உயர்தர நாய் பட்டிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

100ல் 5 நாய்கள் அதிகம் வெறி தன்மை கொண்டதாக உள்ளது. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நாய்களைப் பிடித்தாலும் மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளது. தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் பிரச்னை அதிகளவில் உள்ளது. நாய் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தால் கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே கூட்டம் நடைபெற்றது. நடைமுறையில் உள்ள மக்கள் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி அடுத்த 10 நாட்களுக்குள் மீண்டும் தன்னார்வலர்கள் மற்றும் கால்நடை துறையினர் உள்ளிட்டோருடன் இணைந்து கூட்டம் நடைபெற உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி ஜூலை 10ம் தேதி தொடங்குகிறது. இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தெரு நாய்களை கணக்கெடுக்கும் பணிகள் நாளை தொடங்குகிறது: தன்னார்வலர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: