நெல்லைக்கு செப்.24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில்; முன்னேற்பாடுகள் குறித்து தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு..!!

நெல்லை: நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 24ம் தேதி இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து சென்னைக்கு செப்.24-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை- மைசூர், சென்னை- கோவை, திருவனந்தபுரம்- காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் இயங்கி வருகிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல வேண்டுமானால் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத் ரயிலில் 5.30 மணிக்கு நேரம்தான் ஆகிறது. இது போல் முக்கிய நகரங்களில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து நெல்லை- சென்னை மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டது. சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலானது ஆகஸ்ட் 6 முதல் இயக்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இந்த தகவல்களை தெற்கு ரயில்வே மறுத்திருந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில், நெல்லையில் இருந்து சென்னைக்கு செப்.24-ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

தொடக்க விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து நெல்லை ரயில் நிலையத்தில் தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 24ம் தேதி நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு வந்தே பாரத் ரயில் தொடக்க விழா நடைபெறவுள்ளது. தென்னக ரயில்வே சார்பில் 3 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து விஜயவாடாவுக்கும் செப்.24 முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கும் வந்தே பாரத் ரயில் இயக்கம் செப்.24 முதல் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லைக்கு செப்.24ம் தேதி முதல் வந்தே பாரத் ரயில்; முன்னேற்பாடுகள் குறித்து தென்னக கோட்ட ரயில்வே மேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: