தேசிய ஆசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடு முழுவதும் தேசிய விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் அன்றைக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் 12 பேர் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 75 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மதுரை மற்றும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி இருவரும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 75 பேரும் டெல்லி சென்றுள்ளனர். அங்கு அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நல்லாசிரியர் விருது பெற்ற அனைவரையும் தனது இல்லத்திற்கு வரவழைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

The post தேசிய ஆசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: