முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: கர்நாடகாவை வீழ்த்தியது ஐஓசி

சென்னை: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் லீக் சுற்றில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐஓசி) 4-3 என்ற கோல் கணக்கில் ஹாக்கி கர்நாடகா அணியை வீழ்த்தியது.எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் தேசிய அளவிலான எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. 5வது நாளான நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ஹாக்கி கர்நாடகா – ஐஓசி அணிகள் மோதின. லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்ட உள்ள நிலையில், இரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டின.

ஐஓசி வீரர் குர்ஜிந்தர் சிங் 15வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். பதில் கோலடிக்க முயன்ற கர்நாடகாவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஐஓசி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.2வது பாதியில் இரு அணிகளும் மாறி, மாறி கோலடிக்க ஆட்டம் விறுவிறுப்பானது. ஐஓசி வீரர்கள் அர்மன் குரோஷி 33வது நிமிடத்தில் பெனால்டி கோலும், தல்வீந்தர் சிங் 37வது நிமிடத்தில் ஃபீல்டு கோலும் அடித்து அசத்தினர். பதிலுக்கு கர்நாடகா வீரர் கணேஷ் மஜிஜி 39வது மற்றும் 41வது நிமிடத்தில் அடுத்தடுத்து ஃபீல்டு கோல் போட்டு அதிரடி காட்டினார்.

53வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஐஓசி வீரர் குர்ஜிந்தர் சிங் மீண்டும் கோல் அடித்து அசத்தினார். கடைசி கட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய கர்நாடக அணிக்கு, கணேஷ் மஜிஜி 58வது நிமிடத்தில் தனது ஹாட்ரிக் கோலை பதிவு செய்து நம்பிக்கை அளித்தார். எனினும், பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் ஐஓசி அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்த… கர்நாடக வீரர் கணேஷ் மஜிஜியின் ஹாட்ரிக் கோல் வீணானது.

The post முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி: கர்நாடகாவை வீழ்த்தியது ஐஓசி appeared first on Dinakaran.

Related Stories: