சொந்த வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தியதால் கார் உரிமையாளர்களுக்கு பணம் வழங்குவதை நிறுத்திவைக்க கோரி வழக்கு: அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கான கட்டணத்தை வழங்க கூடாது என்ற வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் சங்கத்தின் கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி, சொந்த பயன்பாட்டு வாகனங்கள், தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறி, தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 அந்த மனுவில், தேர்தல் பணிகளுக்கு சொந்த பயன்பாட்டு வாகனங்களை பயன்படுத்த கூடாது. நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கான கட்டணங்களை விடுவிப்பதை நிறுத்தி வைக்க கோரி அரசுக்கு மனு அனுப்பியுள்ளோம். அந்த மனுவை பரிசீலிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: