ராயபுரத்தில் ரூ.7.19 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் எம்எல்ஏ ஆய்வு: விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார்

தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் ரூ.7.19 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் தங்கும் விடுதியில் தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். விரைவில் தமிழக முதல்வர் இதனை திறந்து வைக்கவுள்ளார். ராயபுரம் சிமென்ட்ரி சாலையில் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதி கட்டிம் பழுதடைந்த காரணத்தால் அதனை இடித்துவிட்டு, தாட்கோ மூலம் ரூ.7.19 கோடி செலவில் 2 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டுமானப் பணி தற்போது முடிவுற்று மாணவிகளின் பயன்பாட்டிற்கு புதிய விடுதி வழங்கப்பட உள்ளது. கட்டி முடிக்கப்பட்ட விடுதியை ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் தாட்கோ தலைமைப் பொறியாளர் செல்லப் பாண்டியன், செயற்குழு பொறியாளர் அன்பு சாந்தி மற்றும் திமுக பகுதிச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த கட்டிடம் உயர்கல்வி, கல்லூரி, தொழிற்பயிற்சி படிக்கும் ஆதிதிராவிட மாணவிகள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கீழ்த்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்டது. 2 கட்டிடத்திலும் 200 மாணவிகள் வரை தங்கலாம். அவர்களுக்கு உணவு அருந்தும் இடம், சமையலறை, தங்கும் அறைகள், கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. விரைவில் தமிழக முதல்வர் இந்த கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

The post ராயபுரத்தில் ரூ.7.19 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் எம்எல்ஏ ஆய்வு: விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: