சென்னை: பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறையில் 450 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு எளிதாக கறவை மாட்டுக் கடன் பெற்று வழங்க வழிவகை செய்தல், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக செயல்படுத்துதல், சுழற்சி பொருளாதாரம் மற்றும் சிறு பால் பண்ணை அமைப்பதற்கான நிதி ஆதாரங்கள் ஆகியவை குறித்து, மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் கடந்த 1ம் தேதி முதல் இன்று வரை ஒருநாள் பயிற்சியாக 4 குழுக்களுக்கு பயிற்சி நடந்து வருகிறது.
பயிற்சிக்கு தலைமை வகித்து பால்வளத்துறை அமைச்சர் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கறவை மாட்டுக் கடன் பெற்றுத்தர வங்கியுடன் இணைந்து பணியாற்றவும், பால் கூட்டுறவு சங்கங்களை பல் வகை சேவையுடன் நிலைத்த வளர்ச்சியுடன் கூடிய சங்கங்களாக மாற்ற வேண்டும். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய பாலின் தரத்திற்கேற்றவாறு விலை வழங்க வேண்டும், ஆவின் மூலம் கால்நடை தீவனம் வழங்க வேண்டும், கலப்புத்தீவனம் வழங்கி பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்றார்.
இந்த பயிற்சி வகுப்பில் ஆவின் பால் உபபொருட்கள், பால் பரிசோதனை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன் பெற்று வழங்கும் வழிமுறைகள், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக மாற்றி அந்த சங்கங்களை லாபகரமாக செயல்பட வைப்பது, சுழற்சி பொருளாதாரம் மற்றும் சிறு பால் பண்ணை அமைப்பதற்கு உண்டான நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சியில் 450 பணியாளர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் சுப்பையன் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.
The post பால் உற்பத்தி, பால்பண்ணை மேம்பாட்டு துறையில் 450 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆவின் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.
