மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று தணிந்துள்ளதால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து நேற்று காலை 11.30 மணி நிலவரப்படி 90 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கனஅடியாகவும் சரிந்தது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் திறப்பு 78,443 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 8 மணியளவில் 1 லட்சத்து 53,091 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவு 8 மணிக்கு 91,368 கனஅடியாக சரிந்தது. அதேசமயம் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 112.27 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், 118.02 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.95 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், எந்நேரமும் அணையில் இருந்து, உபரி நீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்படலாம்.

இதனையடுத்து, உபரி நீர் போக்கி பகுதியில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 120 அடியை நெருங்கும் நிலையில் மேட்டூர் அணையைக் காண சேலம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனிடையே நேற்று நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகள் உபரி நீர் போக்கி மதகுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: