மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் நடந்தது என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்யுங்க.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறிய நடிகை விஜயலட்சுமி

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து ரூ.60 லட்சம் பணம், ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து கொண்டு, தற்போது மதுரை செல்வம் மூலம் ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டி வருவதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான், என் சகோதரி உஷாதேவியுடன் பெங்களூரில் வசித்து வருகிறேன். 2007ம் ஆண்டு சீமான் இயக்கத்தில் ‘வாழ்த்துக்கள்’ திரைப்படத்தில் நடித்தேன். எனது சகோதரிக்கும் அவரது கணவருக்கும் இடையே நடந்த பிரச்னையால் நான் சீமானிடம் உதவி கேட்டேன். அதன்பிறகு சீமான் தன்னுடைய நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் எங்களை அழைத்து பேசினார்.

அப்போது சீமான், ‘எனக்கு திருமணமாகவில்லை. வரதட்சணை எதுவும் கொடுக்க வேண்டாம், திருமண செலவை நானே செய்து கொள்கிறேன். உங்களை போன்ற ஈழத் தமிழ் பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தால் போதுமானது’ என்று கூறினார். அதன் பிறகு அவர் எனது தாயிடம் பேசியபோது, அவர் உறவினர்களிடம் பேசிவிட்டு கூறுகிறேன் என்றார். பிறகு ஈழத்தமிழர் போராட்டத்தின் போது சீமான் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் மதுரையில் 3 நட்சத்திர ஓட்டலில் தங்கி தங்கி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வந்தார். அப்போது சீமான் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘எனக்கு யாரும் இல்லை. எனக்கு மனைவியாக இருந்து ஆறுதல் கூற வேண்டும்’ என்றார்.

பின்னர் எனது தாய் சம்மதத்தோடு சீமான் ஏற்பாடு செய்த விமானம் மூலம் நான் அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்றேன். என்னை சீமான் ஆட்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நானும் சீமானும் மாலை மாற்றிக்கொண்டோம். பிறகு தாலி கட்ட சொல்லும் போது, சீமான், நான் பெரியார் கொள்கை பின்பற்றுபவன் மற்றும் கிறிஸ்தவர் என்பதால் என்னுடைய கலாசாரத்திற்கு எதிரானது என்று சொல்லி தாலி கட்ட மறுத்துவிட்டார். அதன் பிறகு சீமானுக்கும் எனக்கும் அவர் தங்கி இருந்து விடுதியிலேயே முதலிரவு நடந்தது. பிறகு இருவரும் எனது வேளச்சேரி வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இதனால் நான் 7 முறை கருவுற்றேன். அப்போது அவரது அரசியலில் சூழலை சொல்லி என்னைகட்டாயப்படுத்தி, கருச்சிதைவு செய்தார்.

நான் சினிமாவில் சம்பாதித்த ரூ.60 லட்சம் பணம், ரூ.35 லட்சம் மதிப்புள்ள நகைகளை சிறுக சிறுக என்னிடம் பெற்று கொண்டார். ஒரு நாள் தேன்மொழி என்பவர் எனக்கு போன் செய்து, எனக்கும் சீமானுக்கும் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் சுகாசினி தலைமையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நீங்கள் யார் என்று கேட்டார்.அதற்கு நான் சீமான் மனைவி என்று கூறினேன். அப்போது அந்த பெண் என்னை ஏமாற்றியது போல் உன்னையும் ஏமாற்றி விட்டாரா என்று என்றார்.இதுகுறித்து நான் உடனே சீமானிடம் கேட்டபோது, அவர் என்னிடம் சண்டை போட்டார்.

மேலும் என்னுடைய சினிமா வாய்ப்பை தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் நான் அளித் புகாரின்படி வளசரவாக்கம் போலீசார் சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அப்போது அதிமுகவின் முக்கிய பொறுப்பாளரான தடா சந்திரசேகர், சீமானுடன் என்னை வாழ வைப்பதாக கூறி எனது புகார் வாபஸ் பெறுவதாக எழுதி வாங்கி கொண்டார். பிறகு கயல்விழி என்பவரை சீமான் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து நான் அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திமுக அரசு வந்ததால் என் புகாருக்கும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் நான் சட்டரீதியாக முயற்சி செய்தபோது, சீமான் கட்சியை சார்ந்த மதுரை செல்வம் என்ற நபர், என்னை தொடர்பு கொண்டு, ‘அக்கா நீங்கள் அண்ணன் சீமான் மீது புகார் கொடுக்காதீங்க உங்களுடன் வாழ்வதாக கூறியுள்ளார். உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50 ஆயிரம் தருவதாக சொல்லி உள்ளார் என்றார். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதனால், நான் பெங்களூரில் வாழ முடியாது, சீமானை என்னுடன் வாழ்க்கையை நடத்த சொல்லுங்கள் என்று கூறினேன்.

ஆனால், சீமான் தூண்டுதலின் பேரில் மதுரை செல்வம் என்னை பற்றி தவறான செய்தியை சமூக வலைத்தளத்தில் பரப்பினார். என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என்னை பற்றிய ஆபாச வீடியோ வெளியிடுவதாகவும் மிரட்டினார். எனவே, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து ஏமாற்றிய, எனது பணம் மற்றும் நகைகளை பறித்து இழிவாக பேசி தற்கொலைக்கு தூண்டிய சீமான் மீதும், சீமான் தூண்டுதலின் பேரில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பி என்னை மிரட்டிய மதுரை செல்வம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

The post மீனாட்சி அம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் நடந்தது என்னை ஏமாற்றிய சீமானை கைது செய்யுங்க.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் விட்டு கதறிய நடிகை விஜயலட்சுமி appeared first on Dinakaran.

Related Stories: