மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வு தேசிய மருத்துவ குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: பொது கலந்தாய்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை என்ற முடிவை தேசிய மருத்துவ குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே மாநில நிதியில் உருவாக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மருத்துவ கல்லூரிகள், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. மாநில சுயாட்சி என்ற கொள்கையில் நாம் உறுதியாக இருக்கிறோம். எந்த நிலையிலும் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கின்ற எந்த சட்டத்தையும் அதிமுக ஆதரித்ததில்லை. நாடாளுமன்றத்தில் தேசிய மருத்துவக் குழுமம் சட்ட மசோதாவை கொண்டுவந்தபோதே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சலிங் நடத்தப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும்.

The post மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வு தேசிய மருத்துவ குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: