மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் மூடப்பட்ட கல்வி நிறுவனம் பெயரில் போலியாக மசாஜ் பயிற்சி சான்றிதழ்: கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்; சென்னை, திருவள்ளூரை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: மூடப்பட்ட கல்வி நிறுவனம் பெயரில் போலியாக மசாஜ் பயிற்சி சான்றிதழ் தயாரித்து, மசாஜ் சென்டரில் இளம்பெண்களை பணியில் அமர்த்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மசாஜ் சென்டர்கள் விதிமுறை மீறி இயங்குவதாக வந்த புகார்களின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த வாரம் கன்னியாகுமரியில் முறையான அனுமதியின்றி இயங்கிய 30க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை போலீசார் சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் வீடுகளை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்தவர்களையும் கைது செய்தனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம் உட்பட மாவட்டம் முழுவதும் பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் நகரிலும் அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவது விபசார தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நடந்த சோதனையில் அனுமதியின்றி இயங்கி வந்த மசாஜ் சென்டர்களை சீல் வைத்தனர். இந்த மசாஜ் சென்டர்களில் பணியாற்றிய பெண்களிடம் நடந்த விசாரணையில் மசாஜ் என்ற பெயரில் இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. மசாஜ் சென்டர்களில் பணியாற்ற கூடியவர்கள் முறைப்படி அதற்கான பட்டய பயிற்சியை முடித்திருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இதற்கான பயிற்சியை முடித்து சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் அதிகாரிகளை ஏமாற்றும் வகையில், போலியாக மசாஜ் பயிற்சி முடித்ததாக சான்றிதழ்கள் தயாரித்துள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் மசாஜ் பட்டய பயிற்சி முடித்ததாக 2 இளம்பெண்கள் சான்றிதழ்கள் வைத்திருந்தனர். இந்த கல்வி நிறுவனம் குறித்து விசாரித்த போது, அந்த கல்வி நிறுவனம் மூடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் 2020 – 21ம் ஆண்டில் இந்த கல்வி நிறுவனத்தில் பயிற்சி முடித்ததாக போலி சான்றிதழ்கள் தயாரித்து உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் 5, 6ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார்கள்.

இவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 3 பெண்கள் மற்றும் 2 ஆண்களை போலீசார் கைது செய்தனர். மசாஜ் சென்டர்களில் இருந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களை இங்கு அழைத்து வருவதற்காக புரோக்கர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். இந்த புரோக்கர்கள் தான் போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்தது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக தற்போது புரோக்கர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறார்கள். மேலும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

* ரூ.2 ஆயிரத்திற்கு உல்லாசம்
மசாஜ் சென்டர்களில் உள்ள இளம்பெண்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறையில் ஊருக்கு செல்வார்கள். வாடிக்கையாளர் உள்ளே வர ரூ.1000 நுழைவு கட்டணம் கொடுக்க வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணுடன் இருக்க ரூ.1000ம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஒரு நபரிடம் இருந்து ரூ.2000 வசூலித்துள்ளனர். பின்னர் தேவைக்கேற்ப கூடுதல் கட்டணமும் வசூலித்துள்ளனர்.

The post மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் மூடப்பட்ட கல்வி நிறுவனம் பெயரில் போலியாக மசாஜ் பயிற்சி சான்றிதழ்: கைதானவர்களிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்; சென்னை, திருவள்ளூரை சேர்ந்த 3 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: