திருமண மண்டபங்கள், உணவகங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் வாலாஜாபாத் பாலாற்றுப்படுகையில் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: திருமண மண்டபங்கள், உணவகங்களில் இருந்து எடுத்து வந்து கொட்டப்படும் உணவு கழிவுகளால் வாலாஜாபாத் பாலாற்றுப்படுகையில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு, பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. எப்போதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் பாலாற்றுப்படுகையயொட்டி உள்ளன. மேலும், இங்குள்ள பொதுமக்கள் நாள்தோறும் வாலாஜாபாத் வந்துதான் பல்வேறு நகர்ப்புற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இங்குள்ள கிராமமக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பாலாற்றுப்படுகை. இங்கிருந்துதான் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் நாள்தோறும் பாலாற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளுக்கும் பாலாற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாலாற்று குடிநீர் வழங்கும் பகுதிகளில் தற்போது கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகள் மற்றும் வாலாஜாபாத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது பாலாற்றுபடுகை. இங்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

வாலாஜாபாத் நகர் பகுதி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் இறைச்சி, தேங்காய் ஓடு, அழுகிய பழங்கள், காய்கறிகள், சாலையோர உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் பாலாற்று படுகையிலேயே கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால், பாலாற்று குடிநீர் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும், உணவகங்களில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் மற்றும் திருமண மண்டபங்களில் இருந்து கொண்டு வரப்படும் உணவு கழிவுகளையும் பாலாற்றில் உள்ள தரைப் பாலத்தில் இருந்து மழைநீர் செல்லும் ஓடையிலேயே கொட்டி விட்டுச் செல்கின்றனர்.

கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் அழுகி பெரும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பாலாற்று குடிநீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாசடையும் சூழல் நிலவுகிறது. பாலாற்றப்படுகையை பொதுப்பணித்துறை அல்லது சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு இங்கு கொட்டப்படும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இங்கு கொட்டப்படும் கழிவுகளை யார் கொட்டுகிறார்கள் என்பதை கண்காணித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

* துர்நாற்றம் வீசுது
வாலாஜாபாத் ரவுண்டானாவில் இருந்து அவளூர் வரை செல்லும் தரைப்பாலம் பாலாற்றின் மையப்பகுதியில் உள்ளது. இதனால், வாலாஜாபாத் மட்டுமின்றி கிராமப் பகுதியில் உள்ள முதியவர்கள், இளைஞர்களும் இந்த தரைப்பாலத்தில் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும்போது இங்கு கொட்டப்படும் உணவு கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால், நடையபயிற்சி செய்ய கடும் சிரமமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

*நோய்கள் பரவும் அபாயம்
பாற்றில் கொட்டப்படும் உணவு கழிவுகள் தண்ணீரில் கலந்து ஒரு இடத்தில் தேங்கி நிற்கின்றன. அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் பச்சை பசேலெ கலர் மாறி பாசி படிந்து காணப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் பாலாற்றில் ஆழ்துளை குழாய் மூலம் இங்கிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோம் செய்யப்படுகிறது. இதனால், குடிநீர் மூலம் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

The post திருமண மண்டபங்கள், உணவகங்களில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் வாலாஜாபாத் பாலாற்றுப்படுகையில் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: