மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் தொடர்பாக பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளது. மக்களவையில் முக்கியமான சில மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மீண்டும் அமளி தொடர்ந்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே அவை தொடர்ந்து முடங்கி வருகிறது. நேற்றும் அவை கூடியதும், மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

பிற்பகலில் அவை மீண்டும் கூடிய போது, டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அதிகாரம் வழங்கும் சேவைகள் மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘டெல்லி சேவைகள் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, இது சட்டத்திற்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தின் தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

நமது அரசியலமைப்பில் டெல்லிக்கான சட்டங்களை உருவாக்க ஒன்றிய அரசுக்கு அனுமதி அளிக்கும் விதிகள் உள்ளன. 239ஏஏ பிரிவின் கீழ் அரசியலமைப்பு அத்தகைய அதிகாரங்களை வழங்கியுள்ளது. ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், அம்பேத்கர் ஆகியோர் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கும் யோசனைக்கு எதிராக இருந்தனர். எதிர்கட்சியினர் டெல்லியை பற்றி சிந்திக்க வேண்டும், உங்கள் கூட்டணி பற்றி அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ, சில கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கோ, சட்டத்தை ஆதரித்தும், எதிர்க்கும் அரசியலிலும் ஈடுபட வேண்டாம் என்பது அனைத்து கட்சிகளுக்கும் எனது வேண்டுகோள்.

புதிய கூட்டணிகளை உருவாக்க பல வழிகள் உள்ளன. மசோதாக்கள் மற்றும் சட்டங்கள் மக்கள் நலனுக்காகவே உள்ளன. டெல்லி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இவை ஆதரிக்கப்பட வேண்டும் அல்லது எதிர்க்கப்பட வேண்டும். உங்கள் கூட்டணிக்காக மக்கள் நலனை பலி கொடுக்காதீர்கள்’ என்றார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்பிக்கள், ‘இதுபோன்ற மசோதாவை கொண்டு நடைமுறையை உடைக்க வேண்டாம்’ என்றனர்.

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு டெல்லி சேவைகள் மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் கே.சுரேஷ் கூறுகையில், ‘இரட்டை போக்கை காட்டுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நேரு, படேல், அம்பேத்கரை பயன்படுத்தி கொள்கிறார்கள். குற்றம் சாட்டுகிறார்கள். இது பாஜகவின் அரசியல் தந்திரம்’ என்றார். அதே நேரத்தில் மணிப்பூர் விவகாரம் மற்றும் டெல்லி சேவைகள் மசோதாவை திரும்ப பெற கோரி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அதே நேரத்தில், எஸ்சி, எஸ்டி நிதியை பிற துறைகளுக்கு திருப்பி அனுப்பியதாக கூறி கர்நாடகா அரசுக்கு எதிராக பாஜ எம்பிக்கள் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில் மக்களவை இன்று காலையில் தொடங்கியதும் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமரின் அறிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து நண்பகல் வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், 2023-ம் ஆண்டுக்கான சேவைகள் அமைப்புகளுக்கான (கட்டளை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்) மசோதா, 2023 குறித்து பேசினார். பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (திருத்தம்) மசோதா, 2023’ பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்று மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதம் நடத்த அமைச்சர் பியூஷ் கோயல் கோரிக்கையை முன்வைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் நிராகரித்தனர். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கள் கிழமை காலை 11 மணிக்கு மாநிலங்களவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: