தொடர்ந்து 3வது முறையாக பைனலில் மலேசியா

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டித் தொடரில், மலேசிய அணி தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு முன்னேறி ஹாட்ரிக் சாதனை படைத்தது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் மலேசியா – கொரியா அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் என்பதால் குறைந்தபட்சம் பைனலுக்காவது முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் கொரியா அதிரடியாக விளையாடத் தொடங்கியது. 2வது நிமிடத்திலேயே சீயான் ஜி வூ அதிரடியாக ஃபீல்டு போல் அடிக்க, கொரியா 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடமே பதில் தாக்குதல் நடத்திய மலேசிய அணிக்கு அபு கமல் ஃபீல்டு கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

இரு அணிகளும் சளைக்காமல் போராட… மலேசியாவின் நஜ்மி ஜெஸ்லன் (9வது நிமிடம், ஃபீல்டு கோல்), கொரியாவின் ஜோங்கியோன் ஜோங் (14 வது நிமிடம், பெனால்டி கார்னர்) கோல் அடித்தனர். இதனால், முதல் குவார்ட்டர் முடிவில் 2-2 என சமநிலை நிலவியது. இதன் பிறகு ஆட்டத்தை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மலேசிய அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஃபைசல் சாரி (19’), நஜ்மி ஜெஸ்லன் (21’), சில்வரியஸ் ஷெல்லோ (47வது மற்றும் 48வது நிமிடம்) அடுத்தடுத்து கோல் அடித்து கொரியாவை திணறடித்தனர்.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று தொடர்ந்து 3வது முறையாக பைனலுக்கு முன்னேறி ஹாட்ரிக் சாதனை படைக்க, நடப்பு சாம்பியன் கொரியா கோப்பையை தக்கவைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தது. சிறந்த இளம் வீரருக்கான விருதை மலேசியாவின் அபு கமலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறந்த ஆட்டக்காருக்கான விருதை மலேசியாவின் கோல் கீப்பர் ஹபிசுதீனுக்கு உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினர்.

பாகிஸ்தான் ஆறுதல் 5வது இடத்துக்காக நடந்த போட்டியில் பாகிஸ்தான் – சீனா அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் அபாரமாக விளையாடி கோல் மழை பொழிந்த பாகிஸ்தான் 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 5வது இடத்துடன் திருப்தி அடைந்தது. நடப்பு தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாத சீனா (6) கடைசி இடம் பிடித்தது.

The post தொடர்ந்து 3வது முறையாக பைனலில் மலேசியா appeared first on Dinakaran.

Related Stories: