காந்தியின் கல்விக்கொள்கைகள்

‘‘கல்வி என்பது பாட நூல்கள் வாயிலாகப் பெறுவது என்கிற எண்ணம் பல பெற்றோர்களிடம் நிலவுகிறது. இந்த சிந்தனையை காந்தி மறுதலித்தார். பாட நூல்கள் மூலமாகவே அனைத்தையும் கற்பித்துவிடலாம் எனில், ஆசிரியர்களின் சொற்களுக்கு மதிப்பற்றுப் போய்விடும். பாட நூல்களை மட்டும் கற்பிக்கும் ஓர் ஆசிரியர், அவரது மாணவர்களிடத்தில் சுயசிந்தனையை விதைக்க முடியாது” என்றார்.ஒருவர் கற்கும் கல்வி அவர் வாழ்க்கைக்கு உதவிடும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதனால்தான் ‘வாழ்க்கைக்கான கல்வி; வாழ்க்கை மூலம் கல்வி; வாழ்க்கை முழுவதும் கல்வி’ என்பதை காந்தி வலியுறுத்தினார். காந்தியக் கல்வியின் அடிப்படையே, தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது என்பதேயாகும்.

காந்தியின் கல்விச் சோதனை:

காந்தியின் முதல் கல்விச் சோதனை தென்னாப்பிரிக்காவில் டால்ஸ்டாய் பண்ணை ஆசிரமத்தில் தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவிலிருந்து 1915ல் இந்தியா திரும்பியவர் அன்றைய இந்திய கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார். அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதன்படி 1917ல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921ல் குஜராத் வித்யா பீடம் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார். விடுதலைப் போராட்டம் தீவிரமான காலத்தில் சேவாகிராமத்தில் வாழ்ந்தபோது, ‘ஹரிஜன்’ இதழில் நாட்டின் கல்வி குறித்து விரிவான ஒரு கட்டுரையை காந்தி எழுதினார். அதில் கல்விமுறையின் பலவீனங்களைப் பட்டியலிட்டிருந்தார்.

பின்னர் காந்தி 1937 அக்டோபர் 22 இல் வார்தாவில் தேசிய கல்வி மாநாட்டை கூட்டினார். அது இந்தியத் தேசியக் கல்வி மாநாடு என்று அழைக்கப்படுகிறது. கல்வியாளர் டாக்டர் ஜாகிர் ஹுசைன் தலைமையில் இந்தியக் கல்வி குறித்து முடிவுசெய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. வார்தா கல்வித் திட்டம் அல்லது ஆதாரக் கல்விக் கொள்கை அந்த கல்விக் குழுவால் பரிசீலித்து முன்மொழியப்பட்டது. பிறகு வரதாவிலும் செகாவோனிலும் சர்வோதய மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. காந்தியின் மரணத்திற்குப் பிறகு அடிப்படை கல்வி மற்றும் முன்-அடிப்படை கல்விப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
– இரத்தின புகழேந்தி

 

The post காந்தியின் கல்விக்கொள்கைகள் appeared first on Dinakaran.

Related Stories: