மதுரை: மதுரை நகரில் ரயில்வேக்கு சொந்தமான ரூ.1,200 கோடி மதிப்பிலான இடங்களை தனியாருக்கு தாரை வளர்க்கும் முயற்சியை கைவிட எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தினார். மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதுரையில் நேற்று அளித்த பேட்டி: ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரையில் உள்ள ரயில்வே நிலங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. வணிக பயன்பாட்டிற்காக அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்தையும், ரயில்வே காலனியில் உள்ள மூன்று பகுதி நிலங்களையும் தனியாருக்கு வழங்க ரயில்வே நில மேம்பாட்டு ஆணையம், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தை கேட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக 11.45 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசரடி ரயில்வே மைதானமும், இரண்டாம் கட்டமாக 29.16 ஏக்கர் பரப்பளவில் ரயில்வே காலனியில் அமைந்துள்ள மூன்று பகுதி நிலங்களும் வழங்க மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் முன்மொழிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,200 கோடி. ரயில்வேயின் சொத்து என்பது மக்களின் சொத்து. அரசரடி ரயில்வே மைதானம் மதுரையில் பல்லாயிரம் வீரர்களை உருவாக்கியதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் நாள்தோறும் பயன்படுத்துவதாக உள்ளது. இதேபோல் நகரின் நுரையீரல் பகுதியாக ரயில்வே காலனியில் 1,550 மரங்கள் நிறைந்து நகரின் ஆக்சிஜன் தேவைக்கும் முக்கிய காரணமாக உள்ளது. தேசத்தின் சொத்தான இவற்றை தனிநபர்களுக்கு தாரை வார்க்க அனுமதிக்கமாட்டோம். இந்த முடிவை ரயில்வே நிர்வாகம் உடனடியாக கைவிடாவிட்டால் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்.
The post மதுரையில் ரயில்வேக்கு சொந்தமான ரூ.1,200 கோடி மதிப்புள்ள நிலத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதா?: வெங்கடேசன் எம்பி கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.