ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

தஞ்சை:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில் நிலைய பகுதியை சேர்ந்த ஜெயரத்தினம்(50), சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ரயில் நிலையம் அருகே ரூ.50 கோடி மதிப்பிலான இடம் உள்ளது. 2011ம் ஆண்டு பாப்பாநாட்டை சேர்ந்த இளங்கோவன் மகன் சிவாவுடன் ஜெயரத்தினத்துக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது தனது இடத்தில் பிரச்னை இருப்பதாக ஜெயரத்தினம் கூறினார். அதற்கு சிவா, எனது உறவினரான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் கூறி உங்கள் பிரச்னையை முடித்து தருகிறேன் என்றார். இதை நம்பிய ஜெயரத்தினம், அவரது இடத்தை சிவா பெயரில் பவர் செய்து கொடுத்தார். ஆனால் அந்த இடத்தை உறவினரான சிவபிரகாசத்திடம் சிவா அடமானம் வைத்தார்.

அதன்பிறகு தஞ்சையை சேர்ந்த செந்தமிழ் செல்வனுக்கு அந்த இடத்தை சிவபிரகாசம் கிரயம் செய்து கொடுத்தார்.இதுகுறித்து ஜெயரத்தினம் அளித்த புகாரின்பேரில், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து சிவாவை கடந்த 7ம் தேதி கைது செய்து கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சையை சேர்ந்த ஜெயப்பிரகாசை(55) நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செந்தமிழ்செல்வனை தேடி வருகின்றனர்.

The post ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: