குருத்துக்குளியில் புலி தாக்கி பசுமாடு பலி

*பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை

ஊட்டி : ஊட்டி அருகே குருத்துக்குளி பகுதியில் புலி தாக்கி பசுமாடு பலியானதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடுகள் மற்றும் பன்றிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவைகள் உணவிற்காக மக்கள் வாழும் பகுதிகளுக்குள் வந்து கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை ஊட்டி அருகேயுள்ள குருத்துக்குளி பகுதியில் புலி தாக்கி சுப்பிரமணியம் என்பவரின் பசுமாடு ஒன்று பலியாகியுள்ளது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தெற்கு வனச்சரக அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கால்நடை மருத்துவர் சிவசங்கரை கொண்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கவும், கால்நடைகளை பாதுகாத்து கொள்ளவும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை ஏற்படுத்தினர். மேலும், இப்பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பொருட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post குருத்துக்குளியில் புலி தாக்கி பசுமாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: