உளுந்தூர்பேட்டை அருகே குட்கா கடத்தி சென்ற கார் கவிழ்ந்து பீகார் வாலிபர் பரிதாப பலி-ராஜஸ்தானை சேர்ந்தவர் தப்பி ஓட்டம்

 

ளுந்தூர்பேட்டை : குட்கா கடத்தி சென்ற கார் சாலையில் கவிழ்ந்ததில், பீகாரை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். தப்பியோடிய ராஜஸ்தானை சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பரமேஸ்வரிமங்கலம் என்ற இடத்தில் நேற்று அதிகாலை கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனே எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இர்ஷாத் (23) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசாரை பார்த்ததும், காரில் இருந்த ஒரு நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். காரை போலீசார் சோதனை செய்ததில், 25 மூட்டைகளில் சுமார் 250 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அசேன்அலி (29) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபர் (30) என்பது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூரூவில் இருந்து சென்னைக்கு இவர்கள் காரில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி சென்ற போது விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post உளுந்தூர்பேட்டை அருகே குட்கா கடத்தி சென்ற கார் கவிழ்ந்து பீகார் வாலிபர் பரிதாப பலி-ராஜஸ்தானை சேர்ந்தவர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: