காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் உள்ள பேருந்து நிழற்குடையை முறையாக பராமரிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் காஞ்சிபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், முசரவாக்கம், திம்மசமுத்திரம், ராஜகுளம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், ஆர்ப்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு, அய்யங்கார் குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுபோல் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனை வருவதற்கும், அங்கிருந்து காஞ்சிபுரம் பஸ்நிலையம் செல்வதற்கும் நோயாளிகள், உறவினர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தன்பேரில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து கொடுத்தார். இதனிடையே, பேருந்து நிறுத்தத்தில் ஒருசிலர் தூங்குவதாலும், பான்பராக் போன்ற பாக்குகளை போட்டு துப்பிவிட்டு செல்வதாலும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் சிலர் மதுஅருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளது. நிழற்குடையில் இருந்த மின்விசிறியை சமூக விரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.

எனவே, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை எதிரேயுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைத்து முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை எதிரேயுள்ள பேருந்து நிறுத்தத்தை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: