கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வரின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி அறிக்கை

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் என்பது இந்த பிரச்னை முழுமையாக தீர்க்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று இந்த பிரச்னையை மூடி மறைக்கவோ, மழுப்பி சமாதானப்படுத்தவோ முயலாத முதல்வருடைய செயல் பாராட்டுதலுக்கு உரியதாகும். இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்குவது நல்லதல்ல.

இறந்துபோன குடும்பங்களுக்கு நிதி உதவி அளிப்பதை கூட விமர்சிக்கக்கூடிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சென்றுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்தவனுக்கு அந்த பணம் கொடுக்கவில்லை. அவன் இறந்து போனால் அவனது குடும்பம் நிராயுத பாணியாக நிற்கக்கூடாது. அந்த குழந்தைகள் செய்த பாவம் என்ன, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒரு மனிதாபிமான அரசுக்கு உண்டு.

அந்த அடிப்படையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். அதை அரசியலாக்குவது அபத்தமாகும். இப்படிப்பட்ட துயர சம்பவங்களில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று, குற்றவாளிகளை தண்டிப்பதற்கும், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வதற்கும் உரிய ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவது தான் ஆரோக்கியமான அரசியலாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வரின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: