அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!

சென்னை : சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தினக்கூலி ரூ.300-ல் இருந்து ரூ.325-ஆக உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இந்த திட்டம் மக்களிடம் மகத்தான வரவேற்பை இன்று வரை பெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் 2013ஆம் ஆண்டு 127 அம்மா உணவகங்களாக தொடங்கப்பட்டது. தற்போது 392 அம்மா உணவகங்களாக அதிகரித்து செயல்பட்டு வருகிறது.

அவற்றில் 3100 மகளிர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ. 300 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தினக்கூலியை உயர்த்தி தர கோரி சுமார் 8 ஆண்டுகளாக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், அண்மையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை ரூபாய் 300-இல் இருந்து 325 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும் ஏப்ரல், மே மாதத்திற்கான ஊதிய உயர்வை அரியர்ஸ் தொகையாக ஊழியர்களுக்கு விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு மூன்று கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.அண்மையில் அம்மா உணவக உட்கட்டமைப்பை மேம்படுத்த 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Related Stories: