ஹமாஸ் படையினரை சுற்றி வளைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு: 8 லட்சம் பாலஸ்தீனர் வெளியேற்றம்

ஜெருசலேம்: வடக்கு காசாவை மையமாகக் கொண்டு ஹமாஸ் படையினருடன் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவம், தான் முற்றுகையிடப்பட்ட பகுதிகளில் சுற்றி வளைத்து தொடர் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் படை இஸ்ரேல் ராணுவம் இடையே கடந்த 7ம் தேதி தொடங்கிய போர் 3 வாரங்களை கடந்து நீடித்து வருகிறது. இந்த போரினால், இதுவரை காசாவில் வசித்த 23 லட்சம் பேரில் 14 லட்சம் பேர் ஐ.நா. அகதிகள் முகாம்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். 8 லட்சம் பேர் வடக்கில் இருந்து தெற்கு காசாவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

ஹமாஸ் படையினரின் ஆதிக்கம் நிறைந்த காசா எல்லையை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், காசா நகருக்குள் பீரங்கி படைகளுடன் நுழைந்து, அதன் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேலிய ராணுவம் அதன் முற்றுகைக்குட்பட்ட பகுதிகள் முழுவதையும் சுற்றி வளைத்து நேற்று குண்டுவீச்சு மழை நடத்தியது. போரினால் பாதித்துள்ள ஆயிரக்கணக்கானோர் காயமடைந்த நோயாளிகளுடன் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்திருப்பதால், சமீப நாட்களாக, வடக்கு காசாவில் மருத்துவமனைகளுக்கு அருகிலும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதே நேரம், ஏமனில் இருந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேலை நோக்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட 3 ஏவுகணைகள் மற்றும் பல டிரோன்களை அமெரிக்கா இடைமறித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவன (யுஎன்டபிள்யூஆர்ஏ) தலைவர் பிலிப் லசாரினி கூறுகையில், “இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை ஒட்டுமொத்தமாக தண்டிக்கிறது. வடக்கு காசாவிலிருந்து தெற்கிற்கு அவர்கள் இடம்பெயர கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

ஆனால், அங்கும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை,” என்று குற்றம் சாட்டினார். அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் குறைந்துவிட்டதால், உணவின்றி தவிக்கும் மக்கள் உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளுக்குள் நுழைந்து உணவு பொருள்களை எடுக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசாவில் நடக்கும் தொடர் ஏவுகணை, டிரோன் மற்றும் குண்டுவீச்சினால் பல வாரங்களாக மின்சாரம் இல்லை. மேலும் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான அவசரகால ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் இஸ்ரேல் முற்றுகையினால் தடை செய்யப்பட்டுள்ளது.

* மீண்டும் சூளுரை
முதல் முறையாக ஹமாஸ் படையினரால் சிறைபிடிக்கப்பட்ட கைதி ஒருவரை வெற்றிகரமாக மீட்டதால் உற்சாகமடைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கான ஐ.நா. அழைப்பை நிராகரித்ததுடன், போரை தூண்டிய ஹமாஸ் படையின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை நசுக்குவதாக மீண்டும் சூளுரைத்துள்ளார்.

* ஐ.நா. ஊழியர்கள் 64 பேர் பலி
ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனத்தை (யுஎன்டபிள்யூஆர்ஏ) சேர்ந்த 64 ஊழியர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில் ஊழியர் ஒருவர் அவரது மனைவி மற்றும் 8 குழந்தைகளுடன் கொல்லப்பட்டார்.

The post ஹமாஸ் படையினரை சுற்றி வளைத்து இஸ்ரேல் குண்டுவீச்சு: 8 லட்சம் பாலஸ்தீனர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: