தகுதி இல்லாதவர்களுக்கு நிதி ஒதுக்கி அதிமுக ஆட்சியில் ரூ.1.33 கோடி முறைகேடு: ஆர்ஐ., விஏஓக்கள் 8 பேர் மீது விஜிலென்ஸ் வழக்கு

தர்மபுரி: தகுதி இல்லாதவர்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து ரூ.1.33 கோடி முறைகேடு செய்த ஆர்ஐ., விஏஓக்கள் 8 பேர் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில், சமூக நலத்துறை மூலம் 2014-2015ல் அதிமுக ஆட்சியின்போது, 762 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில், தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கப்பட்டதாக, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் தணிக்கை நடத்தினர். இதில் 296 தகுதியில்லாத நபர்களுக்கு ரூ.1.33 கோடி வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களுக்கு தகுதி உள்ளவர்கள் போன்று சான்று வழங்கி, பட்டியலில் இணைத்து நிதி உதவி வழங்கி முறைகேடு செய்த 3 வருவாய் ஆய்வாளர்கள், 5 கிராம நிர்வாக அலுவலர்கள் என 8 வருவாய்த்துறை அதிகாரிகள் மீது, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் தற்போது வெவ்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மணி, செல்வம், சாக்கப்பன், போர்க்கொடி, ரத்தனகிரி, வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், உமாராணி, லட்சுமி ஆகியோரிடம் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்.

The post தகுதி இல்லாதவர்களுக்கு நிதி ஒதுக்கி அதிமுக ஆட்சியில் ரூ.1.33 கோடி முறைகேடு: ஆர்ஐ., விஏஓக்கள் 8 பேர் மீது விஜிலென்ஸ் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: