இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் பாம்பனில் பொருத்தம்: வாண வேடிக்கை நிகழ்த்தி உற்சாகம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் நூற்றாண்டு கடந்த பழைய ரயில் பாலத்திற்கு வடக்கு பகுதியில், கடந்த 2020ம் ஆண்டு புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் அக்டோபரில் ரயில் சேவை துவங்கப்பட்டு, டிசம்பர் மாதத்தில் மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் புதிய ரயில் பாலத்தில் இறுதி கட்டப்பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக செங்குத்து தூக்குப்பாலத்திற்கு பாகங்கள் பொருத்தும் பணி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. சுமார் 700 டன் எடையுள்ள இந்த தூக்குப்பாலத்தை மெதுவாக நகர்த்தி இரும்பு தூண்களுக்கு இடையே கொண்டு செல்லப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கப்பல் கடந்து செல்லும் கடல் கால்வாய் மேலே இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதனால் மண்டபம் – பாம்பன் பகுதி பாலங்கள் முழுமையாக இணைந்துள்ளது. இந்த நிகழ்வை ஊழியர்கள் வாண வேடிக்கைகள் நிகழ்த்தி உற்சாகமாக கொண்டாடினர். செங்குத்து தூக்குப்பாலம் 17 மீட்டர் வரை மேலே உயர்த்தும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தூக்குப்பாலத்தை தாங்கி நிற்கும் இரும்பு தூண்களில் உள்ள லிப்ட் இயந்திரங்களில் செங்குத்து தூக்குப்பாலத்தை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக பாம்பன் புதிய ரயில் பாலம் அமைகிறது.

The post இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலம் பாம்பனில் பொருத்தம்: வாண வேடிக்கை நிகழ்த்தி உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: