இந்தியா-இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்: கட்டாய பதிலடி நெருக்கடியில் `ரோகித் & கோ’

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் 28 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2வது டெஸ்ட் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

சொந்த மண்ணில் முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பதிலடி கொடுக்கவேண்டிய நெருக்கடியில் இந்தியா களம் இறங்குகிறது. ஏற்னவே விராட் கோஹ்லி சொந்த காரணத்திற்காக முதல் 2 டெஸ்ட்டிலும் விலகிய நிலையில், காயம் காரணமாக கே.எல்.ராகுல். ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்த டெஸ்ட்டில் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு பதிலாக சர்ப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சவுரப் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது தான்.

ஏற்கனவே பெஞ்சில் உள்ள ரஜத் படிதார், குல்தீப் யாதவ் அணியில் இடம்பெறக்கூடும். கேப்டன் ரோகித்சர்மா ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மிடில் ஆர்டரில் சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர் சொதப்பி வருகின்றனர். இந்த டெஸ்ட்டில் அவர்கள் ரன் அடிக்காவிட்டால் அடுத்து வாய்ப்பு பறிபோகும் நெருக்கடியில் உள்ளனர். விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்வார்.

மறுபுறம் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட்டில் வென்றது புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அதிரடியாக ஆடும் இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறை மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். பேட்டிங்கில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சை சமாளித்து ஒல்லி போப் முதல் டெஸ்ட்டில் 196 ரன் குவித்தது மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. சாக் கிராலி, பென் டக்கெட், ஜோ ரூட், பேர்ஸ்டோ, கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ஜோ ரூட் சுழலிலும் அசத்தி வருகிறார்.

டாம் ஹார்ட்லி முதல் டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் 7 விக்கெட் அள்ளினார். ஜாக் லீச் காயம் காரணமாக விலகிய நிலையில், ஜோயப் பஷீர் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். ரெஹான் அகமது பவுலிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார். வேகத்தில் மார்க் வுட்டிற்கு பதிலாக 41 வயதான ஆண்டர்சன் களம் இறங்குவார் என தெரிகிறது. பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சில் வலுவாக உள்ளதால் 12 ஆண்டுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் திட்டத்தில் இங்கிலாந்து களம் இறங்குகிறது.

133வது முறையாக மோதல்….
* இரு அணிகளும் நாளை நேருக்கு நேர் மோத இருப்பது 133வது டெஸ்ட் ஆகும். இதற்கு முன் ஆடிய 132 போட்டியில் இந்தியா 31, இங்கிலாந்து 51ல் வென்றுள்ளன. 50 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.
* இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் டெஸ்ட்டில் மொத்தம் 11447 ரன் அடித்துள்ளார். ஆனால் தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சேர்த்து கூட அவரின் ரன்னை தொடவில்லை. அந்த அளவிற்கு அனுபவமற்ற அணியாக உள்ளது.

ஆடுகளம் எப்படி?: விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி ஸ்டேடியத்தில் இதற்கு முன் 2 டெஸ்ட் மட்டுமே நடந்துள்ளது. 2016ல் இங்கிலாந்துடன் மோதிய போட்டியில் இந்தியா 246 ரன் வித்தியாசத்திலும், 2019ல் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 203 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்றுள்ளது. இதில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்தியா 502/7 எடுத்தது தான் பெஸ்ட் ஸ்கோர். அந்த போட்டியில் ரோகித்சர்மா முதல் இன்னிங்சில் 176, 2வது இன்னிங்சில் 127 ரன் விளாசினார். பவுலிங்கில் அஸ்வின் இங்கு 2 டெஸ்ட்டில் 16 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
* இந்த ஆடுகளம் முதல் 3 நாட்கள் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், பின்னர் சுழலுக்கு சாதகமாகவும் இருக்கும். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்யும்.
* இதற்கு முன் நடந்த 2 டெஸ்ட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் 47, வேகப்பந்து வீச்சாளர்கள் 23 விக்கெட் எடுத்துள்ளனர்.

கில், ஜெய்ஸ்வால் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறுகையில், “இங்கிலாந்து அதிரடி பேட்டிங் செய்தாலும் இந்திய வீரர்கள் தங்களுடைய வழக்கமான பாணியில் விளையாடுவார்கள். இங்கிலாந்துக்காக பேட்டிங் ஸ்டைலில் எந்த மாற்றமும் இருக்காது. அனுபவமற்ற வீரர்கள் அணியில் இருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஜெய்ஸ்வால், கில் பெரிய ஸ்கோர் அடிப்பார்கள். சர்ப்ராஸ் கான், ரஜத் படிதார் இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். நிச்சயமாக அவர்கள் சூப்பர் வீரர்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். டிராவிட், ரோகித்சர்மா தான் இதில் முடிவு செய்வார்கள்’’ என்றார்.

The post இந்தியா-இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடக்கம்: கட்டாய பதிலடி நெருக்கடியில் `ரோகித் & கோ’ appeared first on Dinakaran.

Related Stories: