‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு விரைவில் பேச்சுவார்த்தை செப். 30ம் தேதிக்குள் மாநிலம் வாரியாக தொகுதிகள் பங்கீடு: சில மாநில ‘சீட்’ பிரச்னைகளை தீர்க்க தனித்திட்டம்

புதுடெல்லி: லோக்சபா தேர்தலுக்காக ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு விரைவில் மாநில அளவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. வரும் செப். 30ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யவும், சில மாநிலங்களில் உள்ள ‘சீட்’ பிரச்னைகளை தீர்க்க தனித்திட்டம் வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் மும்பையில் ‘இந்தியா’ கூட்டணியின் இரண்டு நாள் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக உள்பட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் வியூக குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கே.சி.வேணுகோபால் (காங்கிரஸ்), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவத் (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா), ஹேமந்த் சோரன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா), ராகவ் சதா (ஆம் ஆத்மி), ஜாவேத் அலிகான் (சமாஜ்வாடி), லாலன் சிங் (ஐக்கிய ஜனதாதளம்), டி.ராஜா (இந்திய கம்யூ.), உமர் அப்துல்லா (தேசிய மாநாட்டு கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மா.கம்யூ. கட்சி சார்பில் குழுவில் இடம்பெறும் தலைவரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட ஒருங்கிணைப்பு குழு தான் தேசிய மற்றும் மாநிலம் வாரியாக கூட்டணி தொடர்பான அடுத்தடுத்த முக்கிய முடிவுகளை எடுக்கும். குறிப்பாக தொகுதி பங்கீடு தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும். இந்த பணியை வருகிற 30ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல 19 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழு, 19 பேர் கொண்ட பத்திரிகையாளர்கள் குழு, 12 பேர் கொண்ட சமூக ஊடக குழு, 11 பேர் கொண்ட ஆய்வு குழு ஆகிய குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கூட்டணியின் இலச்சினை நேற்று வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. மேற்கண்ட குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பு குழு உடனடியாக செயல்பட தொடங்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை எதிர்க்க திட்டமிட்ட நிலையில், சில மாநில அளவில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் எவ்வாறு தொகுதி பங்கீடு செய்யப் போகின்றன? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநில அளவிலான ெதாகுதி பங்கீடு வேலையை 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு தான் முன்னெடுத்து செல்லும். மாநில வாரியாக சிக்கலான தொகுதி பங்கீடு என்று பார்த்தால் பஞ்சாப், டெல்லியில் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் ஏற்படும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ்-சமாஜ்வாதி, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் – மா.கம்யூ., மகாராஷ்டிராவில் காங்கிரஸ் – சிவசேனா (உத்தவ் அணி) – தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்டில் காங்கிரஸ் – ஜேஎம்எம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம், பீகாரில் காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – ஐக்கிய ஜனதா தளம், ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி – மக்கள் ஜனநாயக கட்சி, கேரளாவில் காங்கிரஸ் – மா.கம்யூ., – இ.கம்யூ போன்ற கட்சிகளிடையே தொகுதி பங்கீடு நடக்க உள்ளது.

மேற்கண்ட மாநிலங்களில் கடந்த லோக்சபா, பேரவை தேர்தல்களில் மேற்கண்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. ஆனால் வரும் தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. அதுவும் எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள், பாஜகவை வீழ்த்தும் நோக்கில் கூட்டணி வேட்பாளர்களை களத்தில் இறக்கிவுள்ளன. லோக்சபா தேர்தல்களில் தொகுதி பங்கீடுகளை ஒருங்கிணைப்பு குழு மேற்கொண்டாலும் கூட, சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு எப்படி இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில், ‘இந்தியா’ கூட்டணியானது சட்டசபை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டது அல்ல; மாறாக லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டது.

அதனால் மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் கூட்டணியில் இணைந்த கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. அதேசமயம் கேரளாவில் காங்கிரஸ் – இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்து அறிவித்துள்ளன. அதேபோல் பஞ்சாப்பில் அங்குள்ள ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடியாது என்று கூறிவருகின்றனர். எப்படியாகிலும் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள தலைவர்கள் சில மாநிலங்களில் உள்ள தொகுதி பங்கீடு பிரச்னைகளை தீர்த்து, தேர்தலை எதிர்கொள்ள தனித்திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்துள்ளனர். விரைவில் ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் மாநிலம் வாரியாக சென்று தொகுதி பங்கீடு குறித்து ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு விரைவில் பேச்சுவார்த்தை செப். 30ம் தேதிக்குள் மாநிலம் வாரியாக தொகுதிகள் பங்கீடு: சில மாநில ‘சீட்’ பிரச்னைகளை தீர்க்க தனித்திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: