ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

மேலும் வெளியான அறிக்கையில்; “தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் கலந்தாய்வு மே-2024 மாதம் தொடங்கி, நடத்திட அரசளவில் ஆணை பெறப்பட்டு, கலந்தாய்விற்கான உத்தேச காலஅட்டவணை பார்வை-1ல் காணும் செயல்முறைகளின் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2024-25ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள பொதுமாறுதல் கலந்தாய்விற்கு, முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்து வருவதால் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅளவை 25.05.2024 வரை நீட்டித்து செய்தி வெளியிடப்பட்டது.

மேலும் கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது பொது மாறுதல் கலந்தாய்விற்கான திருத்திய காலஅட்டவணை பதவி வாரியாக இத்துடன் இணைத்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உரிய தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: